
'கப்சிப்' ஆன, குமாரசாமி!
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மண்டையைக் குடைந்த, மற்றொரு முன்னாள் முதல்வர் குமாரசாமி, அம்மாநில 'லோக் ஆயுக்தா' நீதிபதி, சந்தோஷ் ஹெக்டேவையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார்.
'இப்படித் தான் நடந்து கொள்வர்' என்று கணிக்க முடியாதபடி, அரசியல் நடத்துவோர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவர் மகன் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும். கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும் முன் இருந்த, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்த பெருமை, இவர்களைச் சாரும். பா.ஜ., ஆட்சியிலும், முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, பல குற்றச்சாட்டுகளை அடுக்கி, கடவுள் முன் சத்தியம் செய்யக் கூடிய அளவுக்கு, நாடகத்தை அரங்கேற்றினார் குமாரசாமி.
எடியூரப்பா பதவி விலகிய பிறகு, அடுத்த அஸ்திரத்தை, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மீது வீசத் துவங்கிவிட்டார் குமாரசாமி. ஹெக்டேயின் நேர்மையைப் பார்த்து பயந்த குமாரசாமி, தன் அரசியல் எதிர்காலத்துக்கும், ஹெக்டே 'ஆப்பு' வைத்து விடுவாரோ என்று அஞ்சி, 'இரவு நேர வாழ்க்கை, ஹெக்டேவுக்கு ரொம்பப் பிடிக்கும்' என, சகட்டு மேனிக்கு விமர்சித்தார்.
ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த, அன்னா ஹசாரேக்குப் பக்க பலமாகச் செயல்படும் ஹெக்டே, விடுவாரா குமாரசாமியை?'யார் சொன்னது? மற்றவர்களைப் போல அல்லாமல், ஒரே வீடும், ஒரே மனைவியும் கொண்டவன் நான்' என, 'இடித்துரைத்தார்!'ஒரு நடிகையை, இரண்டாவது மனைவியாக்கிக் கொண்ட குமாரசாமி, தனிக் குடித்தனம் நடத்துவதைத் தான், ஹெக்டே இப்படிச் சுட்டிக் காட்டினார்; இப்போது, குமாரசாமி 'கப்சிப்!'