இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
UPDATED : ஆக 04, 2011 11:27 PM
ADDED : ஆக 04, 2011 11:09 PM

சென்னை: அ.தி.மு.க., அரசு செயல்படுத்த உள்ள இலவச திட்டங்கள், உயர்த்தி வழங்கப்படும் உதவித் தொகைகளுக்கு மட்டும், 8,900 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவாக, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றுக்காக, 1,250 கோடியும், பசுமை வீடு திட்டத்துக்கு, 1,081 கோடியும், லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கு, 912 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இதில், தமிழக அரசின் வருவாய் வரவாக, 85 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவாக, 85 ஆயிரத்து, 511 கோடி ரூபாயும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் கணக்கில் பற்றாக்குறை இல்லாமல், உபரியாக, 173.87 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூலதன செலவு, 15 ஆயிரத்து, 877 கோடி ரூபாய் இருக்கும் என்பதால், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, 16 ஆயிரத்து, 880 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக, தமிழக அரசின் வரவு-செலவு திட்ட அளவு, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இந்த பட்ஜெட்டில், 8,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு, புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே உள்ள திட்டங்களின் கீழ், கூடுதல் பயன் கிடைக்கும் வகையிலும், திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதற்காக, 1,250 கோடியும், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு, 1,081 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கு, 912 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக, உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதுடன், திருமாங்கல்யத்துக்கு, நான்கு கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்காக, 514 கோடியும், இலவச ஆடு, மாடு வழங்க, 191 கோடியும், மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க, 25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக, 150 கோடியும், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக, 394.04 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டங்கள் தவிர, ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயன்களை அதிகப்படுத்தி வழங்கவும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்காக, 2,842 கோடி, மகப்பேறு உதவித் திட்டத்துக்காக, 596 கோடி, மாணவர்களுக்கு கூடுதல் சீருடை வழங்கும் திட்டத்துக்காக, 202 கோடி, ஒருங்கிணைந்த கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்துக்காக, ஆண்டுதோறும், 680 கோடி ரூபாய் ஒதுக்கீடு என, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுகள் தவிர, மின்சாரம், உணவு, இலவச பஸ் பாஸ் போன்றவற்றுக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய, தி.மு.க., ஆட்சியில், ஒட்டுமொத்தமாக, 7,739 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், 9,381 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வணிகவரி, ஆயத்தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வந்ததால், அரசுக்கு, இந்த நிதியாண்டின் மீதமுள்ள காலத்துக்கு, கூடுதலாக, 3,618 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள், புதிய சலுகைகளால், அரசுக்கு, 8,900 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தி.மு.க., வெளிநடப்பு : சமச்சீர் கல்வி திட்டத்தை நிறைவேற்றாதது, நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., வினரை கைது செய்வது, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களுக்கு இடவசதி வழங்காதது உள்ளிட்ட பிரச்னையை கண்டித்து, சட்டசபையில் இருந்து, தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில், நேற்று காலை, 10.40 மணிக்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்து, பட்ஜெட் உரை நிகழ்த்த ஆரம்பித்தார். அப்போது, சட்டசபை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எழுந்து, சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக பேச ஆரம்பித்தார். உடனே, சபாநாயகர் ஜெயக்குமார், 'நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பின் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்' என்றார். ஆனால், சபாநாயகர் கூறியதை கேட்காமல், சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களை ஸ்டாலின் கூறிவிட்டு, வெளிநடப்பு செய்வதாகக் கூறினார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சபைக்கு வெளியே, நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின், மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளிலும், நலன்களிலும் அக்கறை காட்டவில்லை. தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நல்ல காரியங்களுக்கு குந்தகம் தேடுவது ஒன்றையை நோக்கமாகக் கொண்டு தலைமைச் செயலக இட மாற்றம், சமச்சீர் கல்வி முறை, காப்பீட்டுத்திட்டம், தமிழ்ச்செம்மொழி ஆய்வு மையம் போன்றவற்றை சீர்குலைக்கும் முயற்சியை கண்டிக்கிறோம். நில அபகரிப்பபைத் தடுக்கிறோம் என கூறிக்கொண்டு, அதற்காகவே தனியாக காவல்துறையில் ஒரு பிரிவை ஏற்படுத்தி, இட்டுக்கட்டிய வழக்குகளை எல்லாம் எதிர்க்கட்சியினர் மீது சுமத்தி, கைது செய்து சிறையில் அடைப்பதையே அ.தி.மு.க., அரசு அன்றாடம் செய்து வருகிறது.
சமச்சீர் கல்வி முறையை அனுமதிக்க மாட்டோம் என வீண் பிடிவாதம் பிடிக்கும் மக்கள் விரோத அ.தி.மு.க., அரசைக் கண்டிக்கும் வகையிலும், சபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒரே பகுதியில் அமர்வதற்கு இடவசதி செய்து கொடுக்கும் வரையிலும், சபையின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை என, தி.மு.க., முடிவு செய்து, சபையிலிருந்து வெளி நடப்பு செய்துள்ளோம். என்.கே.கே.பி.ராஜா கைது கண்டிக்கத்தக்கது.