Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பள்ளிக்கரணை காப்புக் காட்டில் பறவைகள் வருகை:நீர்நிலைகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுமா?

பள்ளிக்கரணை காப்புக் காட்டில் பறவைகள் வருகை:நீர்நிலைகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுமா?

பள்ளிக்கரணை காப்புக் காட்டில் பறவைகள் வருகை:நீர்நிலைகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுமா?

பள்ளிக்கரணை காப்புக் காட்டில் பறவைகள் வருகை:நீர்நிலைகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுமா?

ADDED : அக் 09, 2011 01:52 AM


Google News
பள்ளிக்கரணை காப்புக்காட்டில், இரை தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர் நிலைகளில் மீன் பிடிப்பதால், பறவைகளுக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகி வருகிறது.சென்னை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம், கடந்த 2007ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இந்த சதுப்பு நிலம், 30 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. தற்போது, 3 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தான் காணப்படுகிறது.இந்த காப்புக் காட்டிற்கு, பல ஆண்டுகளாக காணப்படாத விறால் அடிப்பான் பறவை, கூழைக்கடா, அன்றில் பறவை உள்ளிட்ட, பல வகை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் இரை தேடி வருகின்றன.

இயற்கையிலேயே இந்த இடம் மழைநீர் சேகரிப்புப் பகுதியாகத் திகழ்கிறது. மழைக் காலங்களில், வெள்ளம் வடியும் பகுதியாகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் நீர்நிலைகளில், பல உயிரினங்கள் வாழ்கின்றன. காப்புக் காட்டில் உள்ள 75 ஏக்கர் நிலத்தில் மட்டும், சென்னை மாநகராட்சி சார்பில், குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால், மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவை விட, கூடுதலான நிலத்தில், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் உள்ள அனைத்து குப்பையும் இங்கு கொட்டுவதால், அக்குப்பை அழுகி, நீர்நிலையின் உள்ளே செல்கிறது. குப்பையை தரம் பிரிக்கும் பணிகளும் இங்கு துவக்கப்படவில்லை. இதனால், நிலத்தடி நீரோட்டம் மாசுபடுகிறது.மருத்துவக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதால், நீர்நிலை மாசுபடுகிறது. இந்த நீரில் வாழும் புழுக்களை மீன்களும் உண்கின்றன.

'இந்த மீன்களைப் பிடித்துச் சாப்பிடும் பொது மக்களுக்கும், நச்சுத்தன்மை கொண்ட நோய்கள் உருவாக வாய்ப்புண்டு' என்று, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நீர்நிலைகளில் காணப்படும் மீன்களில் நச்சுத்தன்மை உள்ளதா என்பதைக் கண்டறிய, ஆய்வுக் கூடத்திற்கு மீன்களை அனுப்பி வைக்க, இயற்கை ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:பள்ளிக்கரணை, வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டாலும், அங்கு தூண்டில் மூலம், வேட்டி மூலம் மீன் பிடிக்கும் தொழில் நடக்கிறது. மீன் பிடிக்கும் வாலிபர்கள், பறவைகளையும் இறைச்சி உணவுக்காக அடித்து விடுகின்றனர். பறவைகளின் பாதுகாப்பு இடமாக விளங்க வேண்டிய இந்தப் பகுதி, பறவைகளை வேட்டையாடும் பகுதியாக மாறி வருகிறது.இந்த ஏரியில் படிந்துள்ள, பல தரப்பட்ட ரசாயனக் கழிவுகளை உண்டு வாழும் புழுக்களை மீன்களும் உண்கின்றன. இந்த மீன்களில் நச்சுத்தன்மை உள்ளதா என்பதைக் கண்டறிய, ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

பெருங்குடி பகுதியில், குப்பை கொட்டப்படுகிறது. அப்பகுதிகளைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் காணப்படும் மீன்களைச் சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலை எடுத்து ஆய்வு செய்த போது, அதில் நச்சுத்தன்மை காணப்படுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.காப்புக்காட்டுப் பகுதியில், மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் தான் குப்பையைக் கொட்ட அனுமதிக்க வேண்டும். ஆனால், மருத்துவக் கழிவுகள், கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் டயர்கள், கோழிகளின் இறகுகள், கழிவுகளும் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருவதால், நீர்நிலை மாசு படிந்து வருகிறது. இங்கு மீன்பிடிக்கத் தடை விதித்து, வெளிநாட்டுப் பறவைகளைக் காப்பாற்ற, வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.-எஸ்.சிந்தா ஞானராஜ்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us