ADDED : ஆக 01, 2011 10:00 PM
திருப்பூர் : ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வரும் 9ம் தேதி முதல் இடைபருவத்தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கும் மட்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சமச்சீர் புத்தகங்கள் வழங்கப்பட்டு, வகுப்பு எடுக்கப்படுகிறது. இதர வகுப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியபடி, அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால், பள்ளிகளில் வழக்கமாக நடத்தப்படும் முதல் இடைப்பருவத்தேர்வு, காலாண்டு தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான முதல் இடைபருவத்தேர்வு அட்டணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஆறு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு அரசு தயாரித்து வழங்கும் பொது வினாத்தாள் வழங்கப்படும். முதல் இடைபருவத்தேர்வை வரும் 9ம் முதல் 12 வரை பள்ளிகளில் நடத்த வேண்டும். ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு வரும் 10 முதல் 12 வரை முதல் பருவத்தேர்வு நடத்த வேண்டும். இவ்வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தற்போது நடத்தி வரும் அடிப்படை கல்வி அடிப்படையில், வினாத்தாள் தயாரித்து தேர்வு நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


