ADDED : அக் 10, 2011 03:10 AM
ஓசூர்: ஓசூர் நகராட்சியில் தி.மு.க., தே.மு.தி.க., வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.ஓசூர் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க., வில் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நேற்று உழவர்சந்தையில் காய்கறி வாங்க வந்த ஆண்கள், பெண்களிடம் ஓட்டு சேகரித்தார். நிர்வாகிகள், நகராட்சியில் தி.மு.க., செய்த சாதனைகள் மற்றும் வாக்குறுதிகள் குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி ஓட்டு சேகரித்தனர்.அதன்பின் கிறிஸ்தவ கோவில்கள் மற்றும் வீதி, வீதியாக சென்று தி.மு.க., வினர் ஓட்டு சேகரித்தனர். பா.ம.க., வேட்பாளர் ஜெயபிரகாஷும், உழவர்சந்தையில் தி.மு.க., வினருக்கு போட்டியாக பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி ஓட்டு சேகரித்தார். தே.மு.தி.க., வேட்பாளர் சந்திரன், ஆனந்தா நகர், சுண்ணாம்பி, கிருஷ்ணாநகர், ராஜகணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வீடு, வீடாக கவுன்சிலர் வேட்பாளர்களுடன் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, ஊழல் அற்ற வெளிப்படையான நகராட்சி நிர்வாகம் அமைய தே.மு.தி.க.,வுக்கு ஓட்டு போடுங்கள், என வாக்காளர்களிடம் தே.மு.தி.க., வினர் வலியுறுத்தினர். மாவட்ட துணை செயலாளர் கணேசன், நகர செயலாளர் வேல்முருகன், நகர பொருளாளர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


