இடைத்தேர்தலுக்காக வாகன சோதனை : 4.60 லட்ச ரூபாய் பறிமுதல்
இடைத்தேர்தலுக்காக வாகன சோதனை : 4.60 லட்ச ரூபாய் பறிமுதல்
இடைத்தேர்தலுக்காக வாகன சோதனை : 4.60 லட்ச ரூபாய் பறிமுதல்
ADDED : செப் 28, 2011 11:45 PM

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி நடந்த வாகன சோதனையில், முறையான கணக்கு இல்லாமல் கொண்டு வரப்பட்ட, 4.60 லட்ச ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு, அக்., 13ல், இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலை எவ்வித முறைகேடுகளுக்கும் இடம்கொடுக்காமல் நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருச்சி மேற்கு தொகுதிக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக, மூன்று பறக்கும் படைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி கலெக்டருமான ஜெயஸ்ரீ அமைத்துள்ளார். இதுதவிர, துணை ராணுவத்தினரும், போலீசாருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் உரிய கணக்கின்றி, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனை உள்ள நிலையில், மொத்தமாக பணம் எடுத்துச் செல்பவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி, பின்னர் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர். திருச்சி கருமண்டபம் செக்-போஸ்டில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி நோக்கி வேகமாக வந்த இண்டிகா காரை நிறுத்தி, கன்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சிகாமணி உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்த பையில், மூன்று லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் வேடப்பட்டியைச் சேர்ந்த கான்டிராக்டர் கனகராஜ் , 45, காரை ஓட்டி வந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், லாரி வாங்குவதற்காக மூன்று லட்சம் ரூபாயுடன் ஊரிலிருந்து வந்ததாக தெரிவித்தார். அவருடைய பணத்தை பறிமுதல் செய்த போலீசார், உரிய கணக்கை காட்டி விட்டு வருமான வரித்துறையினரிடம் பணத்தை பெற்றுக் கொள்ள கனகராஜை அறிவுறுத்தினர். அதேபோல், காலை 11 மணியளவில் நடந்த சோதனையில் போது, தேனியைச் சேர்ந்த ரவிவர்மா என்ற விவசாயி, 1.60 லட்சம் ரூபாயை தனது காரில் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் பணத்தை கொண்டு வந்ததற்கான ஆவணம் ஏதுமில்லை என்பதால், அவருடைய பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடக்கும் வாகன சோதனையில், நேற்று ஒருநாளில் மட்டும் கருமண்டபம் செக்-போஸ்டில், 4.60 லட்ச ரூபாய் முறையான கணக்கு இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்டது.


