Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முறையாக காஸ் வினியோகிக்காத தனியார் காஸ் வாகனம் சிறைபிடிப்பு

முறையாக காஸ் வினியோகிக்காத தனியார் காஸ் வாகனம் சிறைபிடிப்பு

முறையாக காஸ் வினியோகிக்காத தனியார் காஸ் வாகனம் சிறைபிடிப்பு

முறையாக காஸ் வினியோகிக்காத தனியார் காஸ் வாகனம் சிறைபிடிப்பு

ADDED : செப் 16, 2011 01:26 AM


Google News
உடுமலை: உடுமலை அருகே முறையாக 'காஸ்' வினியோகம் செய்யாததை கண்டித்து, இரண்டு நாட்களாக தனியார் காஸ் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அருகே ஜல்லிபட்டியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் காஸ் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட 'காஸ்' வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு முறையாக காஸ் வினியோகம் இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் காஸ் ஏஜன்சி வாகனத்தை சிறைபிடித்து மூன்று மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், நேற்று காலை 7.00மணி முதல் 9.00மணிக்குள் பதிவு செய்தவர்களுக்கு காஸ் வழங்கப்படும்,' என உறுதியளிக்கப்பட்டது.இதனால், சமாதானமடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.ஆனால், நேற்று வழக்கம் போல் வந்த காஸ் வாகனம் சிலருக்கு மட்டும் காஸ் வழங்கி விட்டு கிளம்ப முயற்சித்தால், நேற்று காலை 8.00 மணிக்கு மீண்டும் காஸ் வாகனத்தை சிறைபிடித்தனர்.

பொதுமக்கள் கூறியதாவது:ஜல்லிபட்டியில், குறிப்பிட்ட காஸ் நிறுவனத்தில் பதிவு செய்து 50 அல்லது 60 நாட்களுக்கு பின்னர் தான் சிலிண்டர் வினியோகம் செய்கின்றனர். மேலும், காஸ் 50 நாட்களுக்கு பின்னர் தான் வழங்கப்படும் என்றாலும், ஒரு சிலருக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்களும், பதிவு செய்து தாமதமாக காஸ் வழங்கப்படுவதால், ஒரே சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலை நிலவி வருகிறது. சிலிண்டர் இணைப்பு உள்ளதால், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணையும் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. இதனால், சமையல் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சியில் தொடர்பு கொண்டாலும் முறையாக பதில் அளிக்க மறுக்கின்றனர். வீடுகளுக்கு நேரிடையாக (டோர் டெலிவரி) செய்யப்படுவதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி காஸ் ஏஜன்சி வாகனத்தை நேற்று (நேற்றுமுன்தினம்) மாலை 5.30 மணி சிறைபிடித்தோம்; போலீசாரின் பேச்சுவார்த்தையடுத்து விடப்பட்டது. ஆனால், இன்று (நேற்று) காலை 20 பேருக்கு மட்டுமே காஸ் வழங்கப்பட்டது.பேச்சுவார்த்தையில் கூறியபடி பதிவு செய்த 90 பேருக்கும் காஸ் வழங்க வேண்டும் எனவலியுறுத்தி மீண்டும் காஸ் வாகனத்தை இன்று (நேற்று) காலை 8.00 மணி முதல் சிறைபிடித்துள்ளோம். தீர்வு கிடைக்கும் வரை விடமாட்டோம்,' என்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த தளி எஸ்.ஐ., பச்சையப்பன், தாசில்தார் நல்லசாமி, கிராம நிர்வாக அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொதுமக்கள்,' தற்போது வழங்கும் காஸ் ஏஜென்சி முறையாக காஸ் வினியோகிப்பதில்லை; பிரச்னைக்கு தீர்வாக வேறு காஸ் ஏஜென்சிக்கு இணைப்பு மாற்ற வேண்டும்,' என தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த அதிகாரிகள்,தற்போதுள்ள காஸ் ஏஜென்சிக்கு பதிலாக வேறு காஸ் ஏஜென்சிக்கு இணைப்பு அளிக்க வேண்டும் என மனு அளிக்குமாறு தெரிவித்தனர். சமாதானமடைந்த மக்கள் மனு எழுதி அளித்தனர்; மனுவை பெற்ற வருவாய்த்துறை அதிகாரிகள், மனு மீது பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர். இதனால், 7 மணி நேர போராட்டம் மதியம் 2.00 மணிக்கு நிறைவடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us