/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, தாக்கிய 5 பேர் கைதுரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, தாக்கிய 5 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, தாக்கிய 5 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, தாக்கிய 5 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, தாக்கிய 5 பேர் கைது
ADDED : அக் 04, 2011 01:55 AM
புதுச்சேரி : ரியல் எஸ்டேட் அதிபரை வீடு புகுந்து தாக்கி 15 லட்சம் ரூபாய்
பணம் கேட்ட மர்டர் மணிகண்டன் கூட்டாளிகள் ஐந்து பேரை போலீசார் கைது
செய்தனர்.ஒதியன்சாலை முல்லா வீதியைச் சேர்ந்தவர் முகமது அமீது, 36. ரியல்
எஸ்டேட் அதிபர். வீட்டில் இருந்த இவரை கடந்த 29ம் தேதி அடையாளம் தெரியாத
நான்கு பேர் கொண்ட கும்பல் வந்து மிரட்டியது.கும்பலில் இருந்த ஒருவன்,
தான் கொண்டு வந்த மொபைல் போனை முகமது அமீதின் கையில் கொடுத்து 'ஜெயிலில்
இருந்து மர்டர் மணிகண்டன் பேசுகிறார்' எனக்கூறியுள்ளார்.
முகமது அமீது மொபைல் போனை வாங்கியதும் மறுமுனையில் பேசிய நபர், ''ரியல்
எஸ்டேட்டில் பணம் கொழிக்கிறதாமே. 15 லட்சம் ரூபாய் தயார் செய்து வை என
மிரட்டல் விடுத்தார். இதனைக் கேட்ட முகமது அமீது அதிர்ச்சியடைந்து, பணம் தர
மறுத்து விட்டார்.தகராறு உச்சகட்டத்தை எட்டிய நேரத்தில், தகவலறிந்து
வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த மாறன் என்பவர் அங்கு வந்தார். அப்போது,
முகமது அமீதை அந்தக் கும்பல் தாக்கியதோடு, தடுக்க சென்ற மாறனையும் அந்த
கும்பல் தாக்கி விட்டு தப்பியோடி விட்டது.இதுகுறித்து ஒதியன்சாலை சப்
இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, அந்த நான்கு பேர் கொண்ட
கும்பல் குறித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், சிறையில் உள்ள மர்டர்
மணிகண்டன் தூண்டுதலின் பேரில் கொசப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், 23,
ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்த ராஜசேகர், 20, பெரியார் நகரைச்
சேர்ந்த வாசுதேவன், 22, வாணரப்பேட்டையைச் சேர்ந்த செல்வக்குமார், 21, ஆகிய
நான்கு பேர் மிரட்டல் விடுத்து தாக்கியது தெரிய வந்தது. மேலும்,
விசாரணையில் மர்டர் மணிகண்டன், பிரான்சுவா தோப்பைச் சேர்ந்த ராஜ்குமார்,
38, என்பவரின் மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.


