இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

லே : இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தின் நடவடிக்கை குறித்து, ஜம்மு காஷ்மீர் அரசும், மத்திய பாதுகாப்பு ஏஜன்சியும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
காஷ்மீரின் லடாக் பகுதியில், கடந்த மாத இறுதியில் சீனா ராணுவம் அத்து மீறி நுழைந்து, அங்கிருந்த பாறை ஒன்றில் சிவப்பு ஸ்டார் இலச்சினையை எழுதிவிட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவும், இந்திய - சீன எல்லை அமைதியாக உள்ளது. மற்ற நாடுகளுடன் உள்ள பிற எல்லைகளை ஒப்பிடும் போது, இந்த எல்லை அமைதியாக இருக்கிறது; எந்த பிரச்னையும் இல்லை' என்றார்.
ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகமோ, 'இந்த செயல் மிக ஆபத்தானது' என எச்சரித்தது. இருப்பினும் இந்த விவகாரம் பின்னர் அமுங்கிப்போனது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும், மத்திய பாதுகாப்பு ஏஜன்சியும் இது பற்றி விரிவாக ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த மாதம் 25ம் தேதி லடாக் எல்லையில், லேயின் வடகிழக்கே சிட்டகாங் பகுதியில் சுமர் என்ற இடத்தில், சீனாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் ஊடுருவி ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு வந்து இறங்கியுள்ளன. அதில், சீன ராணுவத்தைச் சேர்ந்த 12 வீரர்கள் இருந்துள்ளனர். அங்குள்ள நம் வீரர்கள் தங்க பயன்படும் கூடாரங்களையும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளையும் அழித்துள்ளனர். மேலும் அங்கிருந்த பாறை ஒன்றில், சீன ராணுவத்தை குறிக்கும் சிவப்பு நட்சத்திர முத்திரையை பெயின்டால் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாக அந்த பகுதி சீனாவைச் சேர்ந்தது என்பதை குறிக்கும் வகையில், '81' என்று குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளனர். அது, சீன மக்கள் விடுதலை ராணுவத்தைக் குறிப்பதாகும். சீன ராணுவ வீரர்கள் பயன்படுத்திய காலி சிகரெட் பாக்கெட்கள் அப்பகுதியில் சிதறிக் கிடந்தன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் ஊடுருவல் பற்றிய செய்தி வெளியானதும், அது குறித்து உதம்பூர் பகுதியில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கல்லாவிடம் கேட்டபோது, 'எவ்வித ஊடுருவலும் நடக்கவில்லை' என உறுதிபட தெரிவித்தார்.இதற்கிடையில், நடந்த சம்பவம் பற்றி நயோமா கலெக்டர், மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.