எங்கள் வயிற்றில் அடிப்பது எவ்விதத்தில் நியாயம்?உயரதிகாரிக்கு எதிராக போலீசார் அதிருப்தி மனு
எங்கள் வயிற்றில் அடிப்பது எவ்விதத்தில் நியாயம்?உயரதிகாரிக்கு எதிராக போலீசார் அதிருப்தி மனு
எங்கள் வயிற்றில் அடிப்பது எவ்விதத்தில் நியாயம்?உயரதிகாரிக்கு எதிராக போலீசார் அதிருப்தி மனு
கோவை:'எங்களது பயணப் படி, உணவுப் படியை குறைத்து தான் அரசின் செலவினத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் உயரதிகாரிகள், ஒரு நாளாவது பஸ்சில் பயணம் செய்திருப்பார்களா?' என, கடும் அதிருப்தியுடன் கூடிய புகார் மனுவை, தமிழக முதல்வருக்கு, கோவை போலீசார் அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக காவல் துறையில், காவலர் முதல், தலைமைக் காவலர் வரையிலானவர்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது; இதைக் கொண்டு குடும்பம் நடத்த இயலாத சூழலில் தவிக்கிறோம்.
'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், காவலர்களின் குறைகளுக்கு தீர்வு ஏற்படும்' என நம்பியிருந்த எங்களுக்கு, பேரிடி விழுந்துள்ளது. எங்களது வருவாயில் கைவைத்து தானா, அரசின் நிதியை உயரதிகாரிகள் மிச்சப்படுத்த வேண்டும்? இப்படி உத்தரவு பிறப்பிக்கும் உயரதிகாரிகளுக்கு நாங்கள் அன்றாடம் படும் கஷ்டம் என்னவென்று தெரியுமா? இன்றைய விலைவாசியை பற்றித் தான் அறிந்திருப்பார்களா?
ஒரு நாளாவது, சாதாரண மக்களைப் போன்று பஸ்சில் பயணம் செய்திருப்பார்களா? அவர்களுக்கு எவ்வித பிரச்னையுமில்லை. குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். தங்களது குடும்பத்தினர் சொகுசான வாழ்க்கை நடத்த என்னென்ன வசதி வேண்டுமோ, அதற்கான அனைத்தையும் எவ்விதத்திலாவது ஏற்படுத்திக் கொள்கின்றனர்.தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனம் தவிர, மேலும் பல அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்துகின்றனர்.
அரசின் நிதியை சிக்கனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவர்களது ஊதியத்தில் இருந்து குறைத்துக் கொள்வார்களா? வாகனப் பயன்பாட்டை குறைத்து எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவார்களா? அதை செய்யாமல், அடிமட்ட காவலர்களான எங்களது வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம்?இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது தான், காவலர்களுக்கும் சங்கம் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. அடி வாங்கும், மிதி வாங்கும் காவலர்கள் யாரிடமும் போய் முறையிட முடியாது; உயரதிகாரிகளையே அணுக வேண்டியுள்ளது. இந்நிலை தொடருமானால், காவலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்; தேர்தல் பணியின் போதும் எதிரொலிக்கும்.இவ்வாறு மனுவில் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.