Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சித்த, ஆயுர்வேத பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : மருத்துவ பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்

சித்த, ஆயுர்வேத பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : மருத்துவ பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்

சித்த, ஆயுர்வேத பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : மருத்துவ பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்

சித்த, ஆயுர்வேத பாடத் திட்டத்தை மாற்ற எதிர்ப்பு : மருத்துவ பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்

ADDED : ஆக 19, 2011 01:43 AM


Google News

சென்னை : 'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ பட்ட படிப்புக்கு, ஏற்கனவே இருந்த பாடத் திட்டமே தொடர்ந்து நீடிக்க, 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்துக்கு, இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் கெடு விதித்துள்ளது.



உரிய நடவடிக்கை எடுத்து, 30 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், இந்திய மருத்துவ முறை பட்டங்களை வழங்குவதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

சித்தா, ஆயுர்வேத மருத்துவ பாடத் திட்டத்தில் இருந்து, 'அலோபதி' மருத்துவ பாடப் பகுதிகளை நீக்க எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சிலிடம் புகார் செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பழைய பாடத்திட்டமே நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.



இது குறித்து மத்திய கவுன்சில் அனுப்பியுள்ள கடித விவரம்: சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யவும், மருத்துவ பட்டத்துக்கான பெயரை மாற்றவும் தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் தீர்மானித்திருப்பது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது, 1970ம் ஆண்டின் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டத்துக்கும், விதிமுறைகளுக்கும் எதிரானது. எனவே பாடப் பகுதிகளை நீக்காமல், மீண்டும் பழைய பாடத் திட்டமே நீடிக்க செய்யவும், பட்டப் படிப்புக்கான பெயர் ஏற்கனவே உள்ளதை போல் நீடிக்கவும் நடவடிக்கை எடுத்து, 30 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். இல்லையெனில், இந்திய மருத்துவ முறை பட்டங்களை அளிக்க, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும், இந்த பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் பட்டங்களை பதிவு செய்யக் கூடாது என மாநில கவுன்சில்களுக்கும் உத்தரவிடப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us