/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/உணவு உற்பத்தியை பலி கொடுத்து விட்டு ஏற்படுத்தப்படும் பிற முன்னேற்றத்தை ஏற்கமுடியாதுஉணவு உற்பத்தியை பலி கொடுத்து விட்டு ஏற்படுத்தப்படும் பிற முன்னேற்றத்தை ஏற்கமுடியாது
உணவு உற்பத்தியை பலி கொடுத்து விட்டு ஏற்படுத்தப்படும் பிற முன்னேற்றத்தை ஏற்கமுடியாது
உணவு உற்பத்தியை பலி கொடுத்து விட்டு ஏற்படுத்தப்படும் பிற முன்னேற்றத்தை ஏற்கமுடியாது
உணவு உற்பத்தியை பலி கொடுத்து விட்டு ஏற்படுத்தப்படும் பிற முன்னேற்றத்தை ஏற்கமுடியாது
நாகர்கோவில் : உணவு உற்பத்தியை பலி கொடுத்து விட்டு ஏற்படுத்தப்பட்டு வரும் பிற முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
உணவின்றி உயிரில்லை.
இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் டாக்டர் லால்மோகன் தலைமையில் நடந்த இந்த தர்ணா போராட்டத்திற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், சாமிதோப்பு பாலபிரஜாதிபதி அடிகளார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, இன்டாக் அறக்கட்டளை, கிரியேட் அறக்கட்டளை, கஸ்தூரிபாய் மாதர் சங்கம், பூமிபாதுகாப்பு சங்கம், குமரி மாவட்ட நுகர்வோர் மையம், குமரி மாவட்ட பெண்கள் நுகர்வோர் மையம், நாகர்கோவில் மக்கள் நல சங்கம், பாசன சபை, யூத் மிஷன், மற்றும் இயற்கை விவசாய நீர் ஆதார பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் இந்த தர்ணா நடந்தது.
தர்ணாவில் இன்டாக் அமைப்பு சார்பில் சுமித்ரா ரகுவரன், கிரியேட் அறக்கட்டளை பொன்னம்பலம், கஸ்தூரிபாய் மாதர் சங்கம் சரோஜினி தேவி, இந்திய மக்கள் உரிமை சங்கம் ராஜூ, வடிவீஸ்வரம் பொதுநல சங்கம் கோதாண்டராமன், பெட்காட் அமைப்பு பீர்முகமது, நாகர்கோவில் பெண்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் முனைவர் ஜாஸ்மின் ஆசீர், குமரி மாவட்ட பூமி பாதுகாப்பு சங்கம் சார்பில் பத்மதாஸ், பாசனசபை தலைவர் வின்ஸ் ஆன்றோ, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஸ்ரீராம், மாத்தாண்டன், சந்திரன், புஷ்பராஜ், ஷேலின் மேரி, மரியஜேம்ஸ், செல்வம், லிட்வின், எல்சி ஜேக்கப், செண்பகசேகரன், மத்தியாஸ், சிலுவை வஸ்தியான், ஸ்ரீதர், சுப்பையா, நீலகண்டன், உஷாகுமாரி, ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தர்ணாவில் கேரளா சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது போல் தமிழ்நாட்டிலும் வயல்வெளி மற்றும் நன்னீர் நிலங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். குமரி வயல்வெளிகளை மக்கள் காக்கவேண்டும். நீர்நிலைகளையும், குமரியின் நீர்நிலைகளையும், இயற்கை எழிலையும் பாரம்பரிய விவசாயத்தையும் வயல்வெளிகளையும் காப்பாற்ற வேண்டும். உணவளிக்கும் வயல்வெளிகளை அழிக்கக்கூடாது. இதைப்போல் வயல்வெளிகளை நிரப்புவதற்கு மலையிடு குழுமம் குன்றுகளிலிருந்து மண் எடுப்பதை தடை செய்யவேண்டும். இவ்விஷயத்தில் கனிமத்துறைக்கு ஒரு வாகனம் கூட இல்லாதது வருந்தத்தக்கது. கனிமத்துறை அதிகாரிகள் சட்டமீறுதல்களை கண்காணிக்க செல்லும்போது ஒப்பந்ததாரர்களின் வாகனங்களை நம்ப வேண்டிய சீர்கேடு இருப்பது மாறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தர்ணாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், குமரி மாவட்டத்தில் பயிர் நிலங்களை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் தினமலர் நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது; விவசாயம் அழிந்து வரும் நிலை உள்ளதால் உலகம் முழுவதும் பனி உருகி இயற்கை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பூமி வெப்பமடைந்து வருவதால் வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்றவை மாறிமாறி ஏற்படுகின்றன. கடலுக்குள் 1 மீட்டர் உயரத்திலான தீவுகள் மூழ்கி வருகின்றன. தற்போது உலகம் முழுவதும் புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடி உள்ளது. இன்னும் இது 2 டிகிரி வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அமைப்பதற்கு வேளாண் இடங்களை அழித்து வருகின்றனர். காட்டை அழித்து ரோடுகளை அகலப்படுத்தும் நிலை மாறவேண்டும். மரங்களை சேதப்படுத்தி இயற்கை ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. இதுபோன்ற செயற்கை சீர்கேடுகளால் மலைகளில் இரு பகுதிகளில் உள்ள பனி உருகி ஆறாக கடலில் சேர்கிறது.
விளைநிலங்கள் தொடர்ந்து வேறு உபயோகத்திற்கு மாற்றப்பட்டால் உலகில் பஞ்சம் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை நிகழ வாய்ப்புள்ளது. ஆப்ரிக்காவில் உணவு பற்றாக்குறையால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ளவர்கள் நிவாரண உதவிபெறும் இடத்திற்கு செல்ல 20 நாள் வரை எடுத்துக்கொள்ள நேரிட்டது. அதற்குள் பல குழந்தைகள் உணவின்றி உறுப்புகள் தளர்ந்து இறந்து விட்டன. தற்போது இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வருவதற்கு உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயத்தை பொறுத்தமட்டில் இயற்கை வேளாண்மை போய், ரசாயன உரம் போட்டு நிலம் கெட்டுபோய் உள்ளன. மேலும் வேளாண்மை நிலங்களில் நெல்லை தவிர வாழை, கரும்பு போன்ற மாற்றுப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. உணவு பற்றாக்குறை தற்போதே துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதனால் கோதுமை, அரிசி போன்றவை இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளது. விளைநிலங்களை பொறுத்தவரை விவசாயம் அல்லாத துறைக்கு மாற்றக்கூடாது. நஞ்சை நிலத்தில் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு ஏற்றவகையில் காணப்படும். இவற்றில் பல ஆயிரம் டன் மண்ணை கொட்டி வீட்டுமனைகளாக்கி வருகின்றனர். இதற்கு தடை விதிக்கவேண்டும். தமிழகம் முழுவதும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக்குவதை தடை செய்யவேண்டும். இதற்கான போராட்டத்தை குமரி மாவட்டத்தில் துவங்கியுள்ளோம். இதை மாவட்டம் தோறும் தொடர்ந்து நடத்த உள்ளோம். இவை முடிந்த பின்னர் தமிழக முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே- என்பதை உண்மையாக்கும் விதம் தமிழகத்தில் வரவேண்டும். ரியல் எஸ்டேட், சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விளை நிலங்களை சீரளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உணவு உற்பத்தியை பலிகொடுத்துவிட்டு ஏற்படுத்தப்படும் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தேவையற்றது. இயற்கை வளங்களையும், விளைநிலங்களையும் அழிக்க முடியாதபடி உறுதியான சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
தற்போது அரசு ஆடு, மாடுகளை இலவசமாக தரவுள்ளது. இவற்றை மேயவிட்டு விவசாயி வளம்பெற மேய்ச்சல் நிலங்களும், காடுகளும் தேவை. வெளிநாடுகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வீடுகள் கட்டுகின்றனர். அதே நிலை இங்கும் வரவேண்டும். வேளாண்மை நிலங்களை பாதுகாக்கும் நிலை அனைவரிடத்தில் வளர்ந்தால்தான் வளமான நாட்டினராக நாம் இருக்க முடியும் என பேட்டியின்போது நம்மாழ்வார் தெரிவித்தார்.


