சட்டசபையை புறக்கணிக்க தி.மு.க., முடிவு:கருணாநிதி அறிவிப்பு
சட்டசபையை புறக்கணிக்க தி.மு.க., முடிவு:கருணாநிதி அறிவிப்பு
சட்டசபையை புறக்கணிக்க தி.மு.க., முடிவு:கருணாநிதி அறிவிப்பு
UPDATED : ஆக 17, 2011 01:15 AM
ADDED : ஆக 16, 2011 11:35 PM

சென்னை:''தி.மு.க., மீண்டும் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்கும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், நேற்று மாலை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 'சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பற்றி இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.தமிழக சட்டசபையில் நடக்கின்ற ஜனநாயக விரோதமான செயல்களை விளக்க,' ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் வரும் 25 ம் தேதி கூட்டம் நடத்தப்படும். சட்டசபையில், ஒரு தலைப்பட்சமாக நடக்க வேண்டும் என்று தான் ஆளுங்கட்சியினர் விரும்புகின்றனர்.பொதுவாக ஒரு ஆளுங்கட்சி; எல்லா கட்சிகளும் அவையிலேயே பங்கு பெற்று கருத்துக்களை பரிமாற வேண்டும் என்று தான் விரும்பும்.
பார்லிமென்டில் கூட எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசுகிறார்கள். எந்த மாறுப்பட்ட கருத்தானாலும் அவைகளைப் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.மரண தண்டனைகளைப் பற்றி குறிப்பிட்டு, யாரையும் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக நான் வலியுறுத்துகிறேன். அந்த கருத்து இவர்களுக்கும் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) பொருந்தும். அன்னா ஹசாரே விவகாரத்தில், இருதரப்பினரும் பிடிவாதத்தை தளர்த்தியிருக்கலாம்.
சட்டசபையில், ஒரே பகுதியில் தி.மு.க., வினருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது 'சிறு பிள்ளைத் தனமானது' என்று நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பன்னீர் செல்வத்தின் வயதுக்கும், அவருடைய அரசியல் அனுபத்திற்கும் தி.மு.க.,வில் உள்ளவர்கள் அனைரும் சிறுபிள்ளைகள் தான். தீயினால் சுட்ட வடுவை விட, நாவினால், சுட்டவடு கொடுமையானது. நாவினால், என் தம்பிகள் சட்டசபையில் சுடப்படும்போது, அதனை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது. மீண்டும் சட்டசபையை தி.மு.க., புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.