சன் "டிவி' மீது நடவடிக்கை கோரி நடிகை ரஞ்சிதா போலீசில் புகார்
சன் "டிவி' மீது நடவடிக்கை கோரி நடிகை ரஞ்சிதா போலீசில் புகார்
சன் "டிவி' மீது நடவடிக்கை கோரி நடிகை ரஞ்சிதா போலீசில் புகார்

சென்னை : சன், 'டிவி' மீது நடவடிக்கை கோரி நடிகை ரஞ்சிதா, நேற்று சென்னையில் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார்.
சில தினங்களுக்கு முன்,'தியான பீடங்கள் மீது தாக்குதல் நடத்தியோரை கைது செய்ய வேண்டும்; சன், 'டிவி' மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நித்யானந்தர் தியான பீட தமிழக நிர்வாகிகள், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். இவ்வளவு நடந்தும், சர்ச்சையில் சிக்கிய நடிகை ரஞ்சிதா மட்டும், எந்த கருத்தையும் தெரிவிக்காமலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அமைதி காத்து வந்தார். சினிமா பக்கமும் தலைகாட்டவில்லை. நடிகை ரஞ்சிதா, நேற்று திடீரென, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, கமிஷனர் திரிபாதியைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர், நிருபர்களிடம் கூறும் போது, சன், 'டிவி' மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கமிஷனரிடம் புகார் செய்தேன்' என்றார். நிருபர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்ட போது,'நிருபர்களை மாலை சந்திக்கிறேன். அப்போது புகார் குறித்து விரிவாக பேசுகிறேன்' என, கூறிவிட்டு காரில் கிளம்பினார்.
மத்திய குற்றப்பிரிவு விசாரணை போலீஸ் கமிஷனர் தகவல்
''நடிகை ரஞ்சிதா புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவர்,'' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறினார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: நடிகை ரஞ்சிதா புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில்,'நித்யானந்தா ஆசிரமக் காட்சிகள், 'மார்பிங்' முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த காட்சிகளை ஒளிபரப்பாமலும், வெளியிடாமலும் இருக்க, சன், 'டிவி' மற்றும் சில வார இதழ்கள் பணம் கேட்டு மிரட்டின. நான் அதற்கு ஒத்துக் கொள்ளாததால், 'மார்பிங்' முறையில் தயாரித்த காட்சிகளை வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளனர். சன்,'டிவி' மற்றும் வார இதழ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தும். இவ்வாறு திரிபாதி கூறினார்.
நித்யானந்தர் பேட்டி
சன்,'டிவி'யில் ஒளிபரப்பான காட்சிகள் குறித்தும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்தும், நித்யானந்தர் இன்று நிருபர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சி, இன்று பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஓட்டலில் நடக்கிறது.