ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : நெல்லித்தோப்பு நல்லாண்டு மேஸ்திரி வீதியில் புதிய ரேஷன் கடையை ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நல்லாண்டு மேஸ்திரி வீதி, தோட்டக்கால் மெயின் வீதி, தோட்டக்கால் வீதி, புவன்கரே வீதி, பூந்தோட்ட வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த பல ஆண்டுகளாக பெரியார் நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். ரேஷன் கார்டுதாரர்கள் பெரியார் நகர் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் பல சிரமங்கள் இருப்பதாக முறையிட்டதன்பேரில், நல்லாண்டு மேஸ்திரி வீதியில் புதிய ரேஷன் கடைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரேஷன் கடையின் திறப்பு விழா நேற்று நடந்தது. ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ரேஷன் கடையைத் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியை வழங்கினார். நிகழ்ச்சியில், தொகுதி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், வார்டு செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.