ADDED : செப் 20, 2025 11:37 PM

குளிர் காலம் துவங்க இருக்கிறது; ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலம் என்பது, நம் நாட்டை ஒப்பிடுகையில் பல மடங்கு குளிராக இருக்கும். அக்கால கட்டத்தில் அங்கு வாழும் பறவையினங்கள் இடம் பெயர்ந்து மித வெப்ப நாடுகளுக்கு வலசை செல்லும்.
அந்த வலசை காலம், ஆண்டுதோறும் அக்., துவங்கி பிப்., வரை நீடிக்கும்.பல்லாயிரம் கி.மீ;, துாரம் பறந்து செல்லும் அந்த பறவைகள், அருவிகள் பாயும் மலைகள், பசுமை போர்த்திய வனங்கள் நிறைந்த இடங்களுக்கு மட்டும் தான் வலசை செல்லும் என்பதல்ல.
அது செல்லும் பாதையில், எங்கெல்லாம் அவற்றுக்கான உணவு, உறைவிடத்துக்கான சூழல் இருக்கிறதோ அங்கெல்லாம் தங்கிச் செல்லும்.தொழில் நகரமான திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கும் பறவைகள் வலசை வருவதுண்டு. தற்போது வலசை காலம் துவங்கியுள்ள நிலையில், சில வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியிருப்பது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்தாண்டுகளில் இக்குளத்தில் நீர் நிரம்பி ததும்பியது; இவ்வாறு, நீர் நிரம்பி ததும்புவது, பறவை வலசைக்கு உகந்ததல்ல என, இயற்கை ஆர்வலர்கள் கூறினர்.
பறவைகள் நீரில் நிற்கும் அளவுக்கு தண்ணீரும், குளத்தில் ஆங்காங்கே உள்ள மேடு, பள்ளங்கள் வெளியில் தெரியும் வகையில் இருந்தால் தான், பறவைகள் வரும் என்ற அடிப்படையில், நீர்மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு, தற்போது தான் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வரத்துவங்கியிருக்கிறது.
பறவைகள் நீரில் நின்று, இரை தேடலுக்கான சூழல் உருவாகியிருக்கிறது.
எனவே, பறவை வலசை இம்முறை களைகட்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.