/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/கர்நாடகாவுக்கு தீயணைப்பு நிலையம் வந்தது எப்போது?கர்நாடகாவுக்கு தீயணைப்பு நிலையம் வந்தது எப்போது?
கர்நாடகாவுக்கு தீயணைப்பு நிலையம் வந்தது எப்போது?
கர்நாடகாவுக்கு தீயணைப்பு நிலையம் வந்தது எப்போது?
கர்நாடகாவுக்கு தீயணைப்பு நிலையம் வந்தது எப்போது?

தீ விபத்துகளை கட்டுப்படுத்தி மக்களின் உயிர்கள், பொருட்களை காப்பாற்றுவதில், தீயணைப்பு படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கர்நாடகாவில் தீயணைப்பு நிலையம் எப்போது முதன் முதலில் திறக்கப்பட்டு என்பது, பலருக்கும் தெரியாது. அதை தெரிந்து கொள்வோமா?
வீடுகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என, எங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், 'டிங் டிங்' என்ற மணியோசையுடன், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு படையினர் தான்.
மனித உயிர்கள், அவர்களின் சொத்துகளை காப்பாற்றுகின்றனர். தீ பிடித்தால் சட்டென நினைவுக்கு வருவது தீயணைப்பு படையினர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அரண்மனை நகர்
அவசர சேவையில் தொடர்பு கொள்ளும் தீயணைப்பு நிலையம் எப்போது, எங்கு துவங்கியது என்ற கேள்வி பலருக்கும் எழும். இதன் பின்னணியில் சுவாரசியமான கதை மறைந்துள்ளது.
'அரண்மனை நகர்' என, அழைக்கப்படும் மைசூரு சமஸ்தானத்தில் கர்நாடகாவின் முதல் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. இந்த பெருமையான விஷயம், எத்தனை பேருக்கு தெரியும்?
கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரிக்கு 1897ல், திருமணம் ஏற்பாடுகள் நடந்தன. ஒருநாள் எதிர்பாராமல் கதவு திரைச்சீலையில் தீப்பிடித்தது. பார்த்துக் கொண்டிருந்தபோதே, அரண்மனையின் பல பகுதிகளுக்கும் தீ பரவியது.
அரண்மனை மரத்தால் கட்டப்பட்டது என்பதால், தீ வேகமாக பரவியது. கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போதைய மதராசில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து, தீயை கட்டுப்படுத்தும் வரை 11 நாட்கள், அரண்மனையில் தீ எரிந்து கொண்டே இருந்ததாம்.
தீயை அணைப்பதற்குள் அரண்மனை கரிக்கட்டையாக மாறிவிட்டதால், அரச குடும்பத்தினர், குடிமக்கள் வருத்தம் அடைந்தனர்.
ஆசிரியர் அறிவுரை
இந்த சம்பவத்துக்கு பின், நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரிடம், ஆசிரியராக இருந்த ஸ்டுவர்டு பிரேஜர் என்பவர், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யும்படி அறிவுறுத்தினார்.
அதன்பின் நால்வடி உடையார், தன் சமஸ்தானத்தில் தீயணைப்பு நிலையம் கட்டினார். கர்நாடகாவில் துவக்கப்பட்ட முதல் தீயணைப்பு நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.