Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ ஓவிய கலையில் அசத்தும் கூலி தொழிலாளி மகன்

ஓவிய கலையில் அசத்தும் கூலி தொழிலாளி மகன்

ஓவிய கலையில் அசத்தும் கூலி தொழிலாளி மகன்

ஓவிய கலையில் அசத்தும் கூலி தொழிலாளி மகன்

ADDED : ஜூன் 15, 2025 09:00 AM


Google News
Latest Tamil News
சாலைகளில் மேடு, பள்ளங்கள் இருப்பதை போன்று, மனிதர்களின் வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கங்கள், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம் என, அனைத்தும் நிறைந்துள்ளது. நாமும் கஷ்டங்களை துச்சமாக நினைத்து, ஓரங்கட்டி விட்டு வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும்.

வறுமை, கஷ்டங்களை கடந்து வாழ்க்கையில் சாதிக்கும் பலர், மற்றவருக்கு ரோல் மாடலாக திகழ்கின்றனர். இவர்களில் மஹேஷ் யாதவும் ஒருவராவார். இவர் கையில் ஒரு பென்சில், காகிதம் கொடுத்தால் போதும், சில நிமிடங்களில் ஓவியம் வரைந்து, அனைவரையும் வியக்க வைப்பார்.

யாத்கிர் மாவட்டம், சுரபுரா தாலுகாவின், சிக்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் மஹேஷ் யாதவ், 19. இவரது தந்தை சேகரப்பா, கூலித் தொழிலாளி. வறுமையிலும் மகனை பி.யு.சி., வரை படிக்க வைத்தார். 'இதற்கு மேல், என்னால் உன்னை படிக்க வைக்க முடியாது. உழைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், ஆரோக்கியம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இனி நீதான் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்' என, மகனிடம் இயலாமையை தெரிவித்தார் சேகரப்பா.

அதன்பின் குடும்பத்துக்காக, வேலை தேடி பெங்களூருக்கு சென்றார். கட்டுமான கூலி வேலை செய்தார். இதில் கிடைத்த வருவாய் குடும்பத்தை நிர்வகிக்க போதுமானதாக இல்லை. எனவே தொழிற்சாலைகளில் வேலை தேட துவங்கினார். ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மாதந்தோறும் 15,000 ரூபாய் ஊதியம் கிடைக்கிறது. ஆனால் பெங்களூரை போன்ற நகரங்களில், வாழ்க்கை நடத்த இந்த ஊதியம் போதாது.

தன் செலவுகளை குறைத்துக் கொண்டு, மிச்ச பணத்தை பெற்றோருக்கு அனுப்பினார். தேவையான பணம் சம்பாதிக்க முடியவில்லையை என்ற ஏக்கம், மஹேஷ் யாதவை வாட்டியது. இவர் எப்போதும் கவலையுடன் தென்படுவதை, சக ஊழியர் சாரதா கவனித்தார். 'எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டாம். மனதை வேறு திசைக்கு மாற்று. உனக்கு தெரிந்த கலையில் ஈடுபடு' என, ஆலோசனை கூறினார்.

அதன்படி மஹேஷ் யாதவ், பென்சில் கலையை கையில் எடுத்தார். தனக்கு நல்ல ஆலோசனை கூறிய சாரதாவின் உருவத்தையே படமாக வரைந்து கொடுத்து அசத்தினார். ஓராண்டாக இந்த கலையில் ஈடுபடுகிறார். தினமும் பென்சில் ஓவியங்கள் வரைந்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். அவருக்கு பாராட்டு குவிகிறது.

கடவுள் படங்கள், தேச தலைவர்கள், சுதந்திர போராட்டக்காரர்கள், மகான்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகையர் என, 500க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார்.

யாருடைய படங்கள் என்றாலும், ஐந்து முதல், 10 நிமிடங்களில் தத்ரூபமாக வரைந்து விடுகிறார். பலரும் தங்களின் படங்கள், தங்கள் பிள்ளைகளின் படங்களை வரைந்து தரும்படி கூறி, வரைந்து செல்கின்றனர். இதற்காக பணமும் கொடுக்கின்றனர்.

அழகான ஓவியங்கள் வரைந்து, பிரேம் போட்டு பிடித்தமானவர்களுக்கு பரிசளிக்கும் கலாசாரம், தற்போது அதிகரிக்கிறது. இது போன்று பரிசளிக்க விரும்புவோர், மஹேஷ் யாதவிடம் வரைந்து கொள்கின்றனர். சமூக வலை தளங்களில் இவர் வரைந்த படங்களால் ஈர்க்கப்பட்ட பலரும், 500 ரூபாய், 1,000 ரூபாய் என, ரொக்கப்பணம் பரிசளிக்கின்றனர்.

தனக்குள் மறைந்திருந்த கலையை, வெளியே கொண்டு வந்ததால் தற்போது அவரது வருவாய் அதிகரித்துள்ளது. அவரது கவலையும் மறைந்துள்ளது. பணியிலும் உற்சாகம் காட்டுகிறார். ஓவியக்கலை அவரது வாழ்க்கையை, தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறது. பணம், புகழ் என இரண்டும் அவரை தேடி வருகிறது.

வரும் நாட்களில் சுரபுராவில், ஓவிய கலை ஸ்டுடியோ துவக்க வேண்டும் என்பது, மஹேஷ் யாதவின் கனவாகும். அது நிறைவேறும் என, நம்புகிறார்.

-நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us