/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ 'நாங்கள் நட்ட செடிகள் இன்று கவனித்து கொள்கின்றன' 'நாங்கள் நட்ட செடிகள் இன்று கவனித்து கொள்கின்றன'
'நாங்கள் நட்ட செடிகள் இன்று கவனித்து கொள்கின்றன'
'நாங்கள் நட்ட செடிகள் இன்று கவனித்து கொள்கின்றன'
'நாங்கள் நட்ட செடிகள் இன்று கவனித்து கொள்கின்றன'
ADDED : மே 25, 2025 05:18 AM

பெங்களூரை சேர்ந்த தம்பதி, தங்கள் வீட்டின் வளாகத்தையே குட்டி வனமாக்கி, வெளியில் உள்ள வெப்பத்தை தடுத்து, வீட்டிற்குள் வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
பெங்களூரில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டடங்களாக வளர்ந்துள்ளன. பெங்களூரின் சீதோஷ்ண நிலைக்காக வந்த சுற்றுலா பயணியர், தற்போது வெவ்வேறு குளிர் பிரதேசங்களுக்கு செல்ல துவங்கிவிட்டனர்.
ஆனால், பெங்களூரை சேர்ந்த தம்பதியான சுமேஷ் - மீதுநாயக், தங்கள் வீட்டின் தோட்டத்தை, குட்டி வனமாக்கி உள்ளனர்.
வீடு இருப்பதே தெரியாத அளவில், வீட்டின் வளாகத்திற்குள் மரங்கள், செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. வெளியே இருந்து அவர்களின் வீட்டு நுழைவு வாயிலை திறந்து உள்ளே சென்ற சில விநாடிகளில் குளிர்ச்சியை அனுபவிக்க துவங்கலாம்.
11 ஆண்டுகளாக..
இதுகுறித்து சுமேஷ், மீதுநாயக் கூறியதாவது:
எங்களின் வாழ்க்கை பயணம் 11 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. வீட்டின் வளாகத்தில் தோட்டம் அமைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வந்தோம். வாரத்தில் ஒரு நாள் பராமரித்து வந்தோம்.
நாட்கள் செல்லச் செல்ல, தோட்டத்தில் செடிகள் வளர்ந்து, பறவைகள் வருவதை கண்டோம். இதையே எங்கள் முழு பணியாக செய்து வருகிறோம். 1,500 சதுர அடி வீட்டின் வளாகத்திற்குள் 2,000 மரங்கள், செடிகள் உள்ளன. இதனால் ரசாயனம் இல்லாமல், தன்னிறைவு பெற்ற நகர்ப்புற வனமாக மாறி உள்ளது.
எங்கள் வீட்டிற்குள் முதன் முறையாக நுழைவோர், வனப்பகுதிக்குள் நுழைந்த அனுபவத்தை பெறுகின்றனர். பறவைகள் கீச்சிடும் சத்தத்தில் பட்டாம்பூச்சிகள் நடனமாடுகின்றன.
நகரில் உள்ள வெப்ப நிலையை விட, எங்களின் வீட்டின் வளாகத்துக்குள் வந்தால், 5 முதல் 6 டிகிரி செல்ஷியஸ் குறைந்து, 'ஏசி' போன்று இருக்கும்.
பறவைகள்
வளமான சுற்றுச்சூழல் அமைப்பை 11 ஆண்டுகளில் வளர்த்துள்ளோம். இங்கு 30 வகையான பட்டாம்பூச்சிகள், 49 பறவை இனங்கள் தினமும் வந்து செல்கின்றன.
இவற்றில் சப்போட்டா மரங்களில் தினமும் பச்சை கிளிகள், கொண்டைக்குருவிகள், தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றன. குருவிகளுக்கென தனியாக சின்னஞ்சிறிய தொட்டிகள் கட்டி, அதில் தானியங்கள் வைத்துள்ளோம். தினமும் கூட்டமாக வரும் குருவிகள், தானியத்தை சாப்பிட்டுச் செல்கின்றன.
இது மட்டுமின்றி, மாம்பழம், கொய்யா, ஸ்டார் புரூட், மல்பெர்ரி, ஆனைக்கொய்யா (அவக்காடோ), டிராகன் புரூட் என பல மரங்கள் விளைவிக்கிறோம்.
இவை அனைத்தும் ரசாயனம் இல்லாதவை. சமையல் கழிவுகள், உலர்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தை பயன்படுத்துகிறோம்.
எங்கள் வீடு முற்றிலும் சூரிய சக்தியில் இயங்குகிறது. இதில் மீதமாகும் மின்சாரம், மின்கட்டமைப்புக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. நாங்கள் நட்ட செடிகள், இன்று எங்களை கவனித்துக் கொள்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏக்கர்கள் தேவையில்லை
ஒரு சிறிய இடம் கூட, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இவர்களின் முயற்சி காட்டுகிறது. இயற்கை மீது அன்பு இருந்தாலே போதும், உங்கள் வீட்டின் சுற்றுப்பகுதியையும் இயற்கை வளமாக, வனமாக மாற்றலாம்.
தினமும் இவர்களின் வீட்டில் வளர்ந்துள்ள மரங்கள், பறவைகள் குறித்து தங்களின் 'இன்ஸ்டாகிராமில்' பதிவிட்டு வருகின்றனர். இதை, 1.3 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
தங்கள் வீடுகளிலும் இதுபோன்று செடி, மரங்களை வளர்க்க, இத்தம்பதியிடம் ஆலோசனை கேட்கின்றனர். அவர்களும் அதற்கான பதிலை தருகின்றனர். வனத்தை உருவாக்க ஏக்கர் அளவில் நிலம் தேவை இல்லை. உங்களின் வீட்டின் மொட்டை மாடி, பால்கனி, கொல்லைப்புறம் இருந்தாலே போதும்
- நமது நிருபர் -.