/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ சிறார்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நுாலகம் சிறார்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நுாலகம்
சிறார்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நுாலகம்
சிறார்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நுாலகம்
சிறார்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நுாலகம்
ADDED : ஜூன் 01, 2025 06:24 AM

உடுப்பியின், மணிப்பாலில் சத்தமில்லாமல் புரட்சி ஒன்று நடந்து வருகிறது. 'பர்ப்பிள் ஸ்பேஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, சிறார்களின் மன நலன் மாற்றத்துக்காக பணியாற்றுகிறது. அமைப்பின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இன்றைய உலகம் டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. புத்தகம் பிடிக்கும் சிறார்களின் கைகளில் ஸ்மார்ட் போன், ஐபோன்கள் தென்படுகின்றன.
இன்றைய சிறார்களின் குழந்தை பருவத்திலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாட்களிலும் சிறார்கள் வெளியே வருவதில்லை. மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டரில் மூழ்கி, தங்களை தொலைக்கின்றனர்.
எச்சரிக்கை
பள்ளி மற்றும் கல்லுாரி விடுமுறை நாட்களில், மொபைல் போனும், கையுமாக இருப்பதை காணலாம். இது சிறார்களின் மனம், உடல் வளர்ச்சிக்கு நல்லது இல்லை என, குழந்தைகள் நல வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறார்களின் மன மாற்றத்துக்காக, உடுப்பியில் 'பர்ப்பிள் ஸ்பேஸ்' அமைப்பு செயல்படுகிறது. சமூக ஆர்வலர் பல்லவி பெஹரா நடத்தும் நுாலகம், தொழில்நுட்ப உலகில் இருந்து சிறார்களை மீட்டு, அறிவை வளர்க்க வழி செய்துள்ளது.
இவர்களுக்காக நுாலகத்தை உருவாக்கி உள்ளனர். 2018ல் உருவாக்கப்பட்ட அமைப்பு, சிறார்களின் நலனுக்காக செயல்படுகிறது.
இவர்களுக்காக உடுப்பியின், மணிப்பாலில் அமைத்த நூலகத்தில் 7,000 புத்தகங்கள் உள்ளன. இங்கு சிறார்கள் மட்டுமின்றி பெரியவர்களும் புத்தகம் படிக்கலாம்.
சிறார்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் அறிவை வளர்க்க தேவையான அனைத்து விதமான புத்தகங்களும் உள்ளன. சிறார்கள் ஆர்வத்துடன் நுாலகத்துக்கு வருகின்றனர்.
குழந்தைகளுக்கான கதை, அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள், காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் என, அனைத்து வகை புத்தகங்களும் இங்குள்ளன.
நுாலகத்தில் புத்தகம் படிக்க மட்டுமின்றி, சிறார்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை விளையாடி மகிழவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து சிறார்கள் புத்தகம் படிப்பதால், விளையாடுவதால் அவர்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
மொபைல் போன் பயன்பாடும் படிப்படியாக குறைந்து வருவதாக, பெற்றோர் கூறுகின்றனர். சிறார்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மனமாற்றம்
இதுகுறித்து, பல்லவி பெஹரா கூறியதாவது:
இயற்கை காட்சிகள் நிறைந்த தோட்டத்தில், நுாலகம் அமைந்துள்ளது. இந்த இடம் சிறார்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்களுக்கு மனமாற்றத்தை அளிக்கிறது. இதை நாங்கள் இலவசமாக நடத்துகிறோம்.
எங்கள் நுாலகம், சிறார்களின் மன ஆரோக்கியத்தை அளிக்கிறது. நானும் கைவினை பொருட்களை தயாரிக்கும் கலைஞர். இதை சிறார்களுக்கு கற்று தருகிறேன். இன்றைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன நிலையை மாற்ற உதவ வேண்டும் என்பது, எங்களின் குறிக்கோள். கல்வி வல்லுநர்களின் ஆலோசனைப்படி, புத்தகங்கள் படிக்க சிறார்களை ஊக்கப்படுத்துகிறோம்.
அவர்களின் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடத்துகிறோம். பர்ப்பிள் ஸ்பேஸ் மிகவும் பாதுகாப்பான இடமாகும். இங்கு சிறார்கள் புத்தகம் படிக்கலாம் விளையாடலாம்.
சிறார்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருந்தால், ஆர்வத்தை இழப்பர் என்பதால், தோட்டத்தில் சுற்றித் திரிய வாய்ப்பு அளிக்கிறோம்.
பயன்படுத்தப்பட்ட பொருட்களை, மறுசுழற்சி செய்து சுவற்றில் அலங்கார பொருட்களை வைத்துள்ளோம். காய்கறிகள் வியாபாரிகளிடம் பெற்ற, பழைய காய்கறி பெட்டிகளை பயன்படுத்தி 'கபோர்ட்' தயாரித்துள்ளோம். இதில் புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளோம்.
எங்களின் பணிகள், சிறார்களின் மனம், உடல் ஆரோக்கியத்துக்காக நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், பெற்றோரை மகிழ்வித்துள்ளது. பலரும் தங்களின் மகன், மகன்களை அங்கு அனுப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -