ADDED : ஜூன் 27, 2025 11:22 PM

சமீப நாட்களாக ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வோரே அதிகம். பணத்தைகொடுத்து வினையை விலைக்கு வாங்க வேண்டாமே. நமது வீட்டிலேயே ஆரோக்கியமான, நாக்குக்கு சுவையான சிற்றுண்டிகளை செய்யலாம்.
வெண்டைக்காய் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதில் பல புரத சத்துக்கள் உள்ளன. ஆனால் சில குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட மறுக்கின்றனர். இவர்களுக்கு ஸ்பெஷல் வெண்டைக்காய் பாப்கார்ன் செய்து கொடுத்தால், சப்பு கொட்டி சாப்பிடுவர். இதை எப்படி செய்வது என்பதை, பார்க்கலாமா?
செய்முறை
முதலில் வெண்டைக்காயை கழுவி, ஒரு அங்குலம் அளவுக்கு நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள் துாள், கரம் மசாலா, சுவைக்கு தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் மிளகாய் துாள், கால் கப் சோளமாவு சேர்த்து, கட்டிகள் இல்லாமல் பிசையவும். இந்த மசாலாவை 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் மைதா, முக்கால் கப் சோளமாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் துாள், சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, உருண்டைகள் பிடித்துக் கொள்ளவும். அதன்பின் வெண்டைக்காய்களில், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மசாலாவை நிரப்பவும்.
அதன்பின் மைதாமாவு உருண்டைக்குள், வெண்டைக்காயைவைத்து, பிரட் துாளில் லேசாக பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் பாப்கார்ன் தயார்.
- நமது நிருபர் -