ADDED : ஜூன் 06, 2025 06:11 AM

தாய்லாந்தில் நடந்த, சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில், மாண்டியாவின் சையத் சர்பராஜ் அகமது, 9, தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
மாண்டியா நகரில் வசிப்பவர் சையத் சர்பராஜ் அகமது, 9. இவர் இங்குள்ள ஸ்ரீசைதன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு மூன்று வயது சிறுவனாக இருந்த போதே, கிக் பாக்சிங்கில் ஆர்வம் இருப்பதை, பெற்றோர் தெரிந்து கொண்டனர்.
மகனின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில், ஸ்கேட்டிங் மற்றும் கிக் பாக்சிங் பயிற்சி பெற, மாண்டியா நகரில் உள்ள ஒஷோகை ஆர்ட்ஸ் அகாடமியில் சேர்த்தனர். அன்று முதல், இங்கு சிறுவன் பயிற்சி பெறுகிறார். மாவட்டம், மாநில, தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கேற்று, 25க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.
ஸ்கேட்டிங் பிரிவிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, 35 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு, தன்னை தயார்ப்படுத்தினார்.
தாய்லாந்தில் சமீபத்தில் சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில், மாண்டியாவின் சையத் சர்பராஜ் அகமது மற்றும் முகமது மக்கி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சையத் சர்பராஜ் அகமது தங்கப்பதக்கம் வென்று, நாட்டுக்கும், மாண்டியா மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்
- நமது நிருபர் -.