Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடுகளம்/ பேட்மின்டன் வீராங்கனைக்கு வருகை பதிவேட்டில் சலுகை

பேட்மின்டன் வீராங்கனைக்கு வருகை பதிவேட்டில் சலுகை

பேட்மின்டன் வீராங்கனைக்கு வருகை பதிவேட்டில் சலுகை

பேட்மின்டன் வீராங்கனைக்கு வருகை பதிவேட்டில் சலுகை

ADDED : ஜூன் 06, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
விளையாட்டுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் ஒன்று குடகு. இங்கு ஹாக்கி விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இங்கு நடக்கும் உள்ளூர் ஹாக்கி போட்டிகள், இந்திய அளவில் பிரபலமானவை.

குடகில் ஹாக்கி மட்டுமின்றி பல விளையாட்டு போட்டிகளிலும் பலர் சிறந்து விளங்குகின்றனர். இவ்வரிசையில் குடகில் 17 வயது பெண் ஒருவர் தற்போது, விளையாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார். அவரது அசுர வளர்ச்சி பார்ப்போரை கதி கலங்க வைக்கிறது.

குடகு மாவட்டம், மடிகேரி பகுதியை சேர்ந்தவர் தியா பீமையா, 17. இவரது பெற்றோர் பீமையா - குஸ்மா. தாய், தந்தை இருவரும் விளையாட்டு பின்னணியை கொண்டவர்கள். தந்தை பீமையா பேட்மின்டன் பயிற்சியாளராக உள்ளார். தாய் குஸ்மா பிட்னஸ் பயிற்சியாளராக உள்ளார்.

இப்படி முழுக்க முழுக்க விளையாட்டு பின்னணியில், இருந்து வந்தவர் சாதாரண விளையாட்டு வீரராக மாறுவதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால், தேசிய அளவிலோ, சர்வதேச அளவிலோ விளையாட்டு வீரராக ஆனார் என்றால் அதிசயம் தானே. அந்த அதிசயத்தை நிகழ்த்தி காட்டி உள்ளார் தியா.

முதல் கனவு


தனது சிறுவயதிலே, தியா, தன் தந்தை பேட்மின்டன் விளையாடுவதை ரசித்து வந்துள்ளார். எதிர்காலத்தில் அவர் போலவே, பெரிய பேட்மின்டன் வீரராக வேண்டும் என கனவு கண்டு உள்ளார். அந்த கனவை, நனவாக்க கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார்.

இவரது ஊரில் மழைக்காலங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கும் என்பதால், அந்த சமயங்களில் பயிற்சிகள் தடைபட்டன. அதே சமயம், குடும்ப சூழல் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மைசூருக்கு குடிபெயர்ந்தனர்.

புதிய டெக்குனிக்குகள்


இவர், தற்போது, மைசூரு வித்யாஸ்ரம் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்து வருகிறார். அருண் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார். தினமும் காலை 5:00 மணிக்கு எழுகிறார். 5:45 மணி முதல் 7:15 மணி வரை பிட்னஸ் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இதையடுத்து, காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, பேட்மின்டனில் புதிய டெக்குனிக்குகள் போன்றவை கற்பார். மதிய உணவுக்கு பின், சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் 1:30 மணிக்கு பயிற்சியில் இறங்குவார். இரண்டு மணி நேர பயிற்சிக்கு பின், வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார். இதன் பின், மாலை 6:00 மணி முதல் இரவு 7:15 மணி வரை உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வார்.

தாயின் பராமரிப்பு


இவருடைய டயட், பிட்னஸ்கள் என அனைத்தையும் அவரது தாய் குஸ்மா பார்த்து கொள்கிறார். பிட்னஸ் பயிற்சியாளருக்கு தன் மகளுக்கு பயிற்சி அளிப்பது கஷ்டமான விஷயம் இல்லையே. இவரது தந்தை, விடுமுறை நாட்களில் தனக்கு தெரிந்த பேட்மின்டன் நுணுக்கங்களை கற்று கொடுக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பல பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார். இதன் காரணமாக, கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த 36வது சப் ஜூனியர் பேட்மின்டன் போட்டியில், 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டு, வெள்ளி பதக்கம் வாங்கினார். ஹரியானாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட அகில இந்திய கிருஷ்ண சைதன்யா பேட்மின்டன் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.

தீவிர பயிற்சி


இதன் காரணமாக, கடந்த ஆண்டு சீனாவில் நடந்த 17 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய பெண்கள் அணியில் இடம் பிடித்தார். மேலும், தற்போது பெங்களூரில் நடக்க இருக்கும் தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தீவிரமாக இறங்கி உள்ளார்.

இதனால், அவர் படிக்கும் கல்லுாரியில் அவருக்கு வருகைப்பதிவேட்டிலும் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது; தினமும் வர வேண்டிய கட்டாயம் கிடையாது. தற்போது, தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளவர், கட்டாயம் பதக்கம் பெற்று, சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us