சதுரங்க போட்டியில் 11 வயது சிறுமி
சதுரங்க போட்டியில் 11 வயது சிறுமி
சதுரங்க போட்டியில் 11 வயது சிறுமி
ADDED : ஜூன் 06, 2025 06:14 AM

நார்வேயில் நடந்து வரும் சதுரங்க போட்டியில் பங்கேற்று, பெங்களூரை சேர்ந்த 11 வயது மாணவி சார்வி, அசத்தி வருகிறார்.
பெங்களூரை சேர்ந்தவர் அனில் குமார் - அகிலா தம்பதி. இவர்களின் மகள் சார்வி, 11. ஐந்து வயது முதலே சதுரங்க போட்டியில் பயிற்சி பெற்று வருகிறார்.
பள்ளி அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று வந்த அவர், ஜார்ஜியாவில் நடந்த 'உலக கேடட் சதுரங்க சாம்பியன்ஷிப்' போட்டியில், எட்டு வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்று, உலக சாம்பியனாக உருவெடுத்தார். மகள், உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின், அவரது தாயார் தனது மென்பொறியாளர் பணியை ராஜினாமா செய்துவிட்டார். சதுரங்க போட்டியில் முழுக்க முழுக்க மகளின் வெற்றியில் கவனம் செலுத்தி வருகிறார்.
அன்று துவங்கிய சார்வியின் பதக்க வேட்டையில், இதுவரை நடந்த பல்வேறு போட்டிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வாங்கி உள்ளார்.
தற்போது நார்வேயில் நடந்து வரும் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான 'உமன் பைட்' மாஸ்டர் போட்டியில் சார்வியும் பங்கேற்றுள்ளார். அங்குள்ள போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக உள்ளார்.
ஒவ்வொரு போட்டி முடிந்ததும், தன்னுடன் போட்டியிட்டவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
சதுரங்க போட்டியில் மட்டுமின்றி, தினமும் மாலையில் நீச்சல், பூப்பந்து பயிற்சியும் செய்து வருகிறார்.
கடந்தாண்டு புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், சார்விக்கு 'தேசிய குழந்தை விருது' வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டியது குறிப்பிடத்தக்கது
- நமது நிருபர் -.