Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பயனற்ற பொருட்களில் கலைவடிவங்களை உருவாக்கும் சுகலி

பயனற்ற பொருட்களில் கலைவடிவங்களை உருவாக்கும் சுகலி

பயனற்ற பொருட்களில் கலைவடிவங்களை உருவாக்கும் சுகலி

பயனற்ற பொருட்களில் கலைவடிவங்களை உருவாக்கும் சுகலி

ADDED : ஜூன் 08, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
கொல்கட்டாவை சேர்ந்தவர் சுகலி, 35. இவர் 11 ஆண்டுகளுக்கு முன், பிழைப்பு தேடி, குடும்பத்துடன் கர்நாடகாவுக்கு வந்தார். பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவின், கோனமெளகுந்தா கிராமத்தில் வசிக்கின்றனர். கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர்.

பசியின்றி வாழ்க்கை நகர்கிறது என, நிம்மதி அடைந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா கால் வைத்தது. வேலையை இழந்து ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி பரிதவித்த குடும்பங்களில், சுகலியின் குடும்பமும் ஒன்று.

அப்போது சுகலி, தனக்குள் மறைந்திருந்த கலைத்திறனை வெளியே கொண்டு வந்தார். அழகான, கண்களை கவரும் அலங்கார பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தார். இவர் தன் தாய் மற்றும் பாட்டியிடம் இக்கலையை கற்றிருந்தார். அது அவருக்கு கை கொடுத்தது. அலங்கார பொம்மைகள், வீட்டு வாசலில் மாட்டி வைக்கும் தோரணம், காகித பூ மாலைகள், துளசி மாடம் உட்பட, பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.

இவரது கை வண்ணத்தில் தயாராகும் கலைப்பொருட்களுக்கு, நல்ல டிமாண்ட் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தனக்கு அறிமுகம் உள்ளவர்களுக்கு பொருட்களை விற்றார். அதன்பின் மற்றவர்களும் வாங்க துவங்கினர். வருமானமும் அதிகரித்தது. கலை பொருட்களுக்கு தேவையான கச்சாப்பொருட்களை, கொல்கட்டாவில் இருந்து தன் உறவினர்கள் மூலம் வரவழைக்கிறார். வீட்டிலேயே பல விதமான கலைப் பொருட்களை தயாரிக்கிறார்.

நாம் பயன்படுத்தி வீசியெறியும் காகிதம், பழைய உடைகள், உடைந்த பொருட்களை வைத்து, அழகான பொம்மைகள், கோவில், பைகள், கடிகாரம், வீட்டு வாசல்களில் பொருத்தப்படும் கலை நயமான தோரணங்கள், பூந்தொட்டிகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என, 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்.

வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தால், அவர்கள் விரும்பிய கலை பொருட்களை தயாரித்து கொடுக்கிறார். இவரது வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்வோரும் உண்டு.

சுகலியின் கலைத்திறனை கண்டு வியக்கும் கிராமத்தினர், தாங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என, விரும்புகின்றனர். கற்றுத்தரும்படி கேட்டனர். சுகலியும் மகிழ்ச்சியோடு சம்மதித்து 40க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமியருக்கு அலங்கார பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுத்தருகிறார். அவர்களும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

வேலை கிடைக்கவில்லை என, வீட்டில் அமர்ந்து பொழுதுபோக்காமல், தன் தாய், பாட்டியிடம் கற்ற கலையை பயன்படுத்தி, வாழ்க்கையில் சாதிக்கும் சுகலி, அனைத்து பெண்களுக்கும் முன் மாதிரியாக விளங்குகிறார். இவரது கலைத்திறன் மென் மேலும் வளர வேண்டும் என, கிராமத்தினர் வாழ்த்துகின்றனர்.

கிராமத்தின் அனைத்து பெண்களும், இந்த கலையை முழுமையாக கற்றுக்கொண்டால், அனைவரும் சேர்ந்து கிராமத்திலேயே ஒரு கடை திறந்து, சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்பது, சுகலியின் கனவாகும். இதனால் கிராமத்து பெண்களின் பொருளாதாரம் உயரும் என்பது, அவரது எண்ணம். அவரது கனவு நிறைவேறட்டும் என, நாமும் வாழ்த்துவோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us