Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ நாய் துணையுடன் வாழும் மூதாட்டி

நாய் துணையுடன் வாழும் மூதாட்டி

நாய் துணையுடன் வாழும் மூதாட்டி

நாய் துணையுடன் வாழும் மூதாட்டி

ADDED : ஜூன் 16, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
கணவரோ, பிள்ளைகளோ இல்லாத 85 வயது மூதாட்டி, வாழ்க்கையை வெறுக்காமல், நாயின் துணையுடன் வாழ்கிறார். இன்றைய இளம் பெண்களுக்கு, இவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

மைசூரின், சாம்ராஜபுராவில் வசிப்பவர் சாமம்மா, 85. இவர் கண் பார்வை அற்றவர். இளம் பெண்ணாக இருக்கும் போதே, இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கொடூர குணம் படைத்த கணவர் வீட்டினர், திருமணமான சில மாதங்களிலேயே, பார்வையில்லை என, நிந்தித்து சாமம்மாவை கொடுமைப்படுத்தி, கழுத்தில் இருந்த தாலியை பறித்து கொண்டு, வீட்டை விட்டே விரட்டினர்.

தாய் வீட்டிலும் ஆதரிக்கவில்லை. கணவர், குழந்தைகள், உற்றார், உறவினர் யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்கிறார். வீடு வீடாக பிச்சை எடுக்கிறார். அதில் கிடைக்கும் வருவாயில் உணவருந்தி வாழ்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இவரிடம் நாய்க்குட்டி ஒன்று அடைக்கலமாக வந்தது. அதற்கு 'சோனு' என, பெயர் சூட்டி வளர்க்கிறார். இதுவே அவருக்கு துணையாக உள்ளது. பிச்சையெடுத்து கிடைக்கும் உணவில், நாய்க்கும் போடுகிறார்.

பார்வையற்ற சாமம்மாவுக்கு, சோனு வழிகாட்டியாக உள்ளது. அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் ஓடி வருகிறது. அவரை அழைத்து செல்கிறது. மாதம் 500 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறார். பிச்சையெடுத்து கிடைக்கும் பணத்தில் வாடகை கட்டுகிறார். மாத உதவித்தொகை உட்பட, அரசின் எந்த சலுகைகளும் அவருக்கு கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளிடம் பல முறை வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை.

ஆதரவற்ற மூதாட்டிக்கு, சோனு மட்டுமே உறுதுணையாக உள்ளது. மனிதர்கள், பிராணிகள் இடையிலான பாசப் பிணைப்புக்கு, சாமம்மா மற்றும் சோனு சிறந்த உதாரணம். தனிமை உணர்வே மாயமானதற்கு, சோனுவே காரணம். இவர்களை பார்த்து கிராமத்தில் அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்.

இது குறித்து சாமம்மா கூறியதாவது:

என் வாழ்க்கையில் சோனு, நம்பிக்கை நட்சத்திரம். தனிமையில் இருந்து விடுபட்டு, யாருடைய துணையும் இன்றி வாழும் எனக்கு சோனு, எல்லாமுமாக உள்ளது. என் சொந்தம், பந்தம், உற்றார், உறவினரும் இதுதான். சோனு இல்லாமல், நான் இல்லை.

ஒருவேளை அது இறந்துவிட்டால், அதை அடக்கம் செய்துவிட்டு மைசூரை விட்டே சென்றுவிடுவேன். என் வாழ்க்கையில் சந்தோஷத்தை தருவதும், ஆறுதலாக இருப்பதும் இது மட்டுமே. தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us