Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்

பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்

பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்

பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்

ADDED : ஜூன் 23, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
இன்றைய நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர். ஒரு காலத்தில் சமையல் அறையே தங்கள் உலகம் என்று இருந்த பெண்கள், தற்போது தொழில்முனைவோராக ஜொலிக்க ஆரம்பித்து உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் பெண் தொழில் முனைவோருக்கு அனைத்தும் எளிதில் கிடைத்து விடும்.

ஆனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு தங்கள் தொழிலுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பது அவ்வளவு எளிது இல்லை. அப்படி இருந்தும் கர்நாடகாவின் கிராம பகுதியில் இருந்து நான்கு பெண்கள் தொழில் முனைவோராக சாதித்து உள்ளனர். அவர்களின் பெயர்கள் ஜெயலட்சுமி, சுஜாதா, பாக்கியம்மா, சர்வாரி.

ஜெயலட்சுமி


பெங்களூரு ரூரல் நந்தகுடி அருகே நெலவாகிலு கிராமத்தை சேர்ந்தவர். தனது கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதை கவனித்த ஜெயலட்சுமி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை கிராம மக்களுக்கு தனது தையல் இயந்திரத்தில் இலவசமாக தைத்து கொடுத்தார். நாளடைவில் இதையே ஒரு தொழிலாக மாற்றினார். வீட்டின் அருகே ஒரு கடையை வாடகைக்கு பிடித்து 15 பெண்களை பணி அமர்த்தி, துணி பைகள் தயாரித்து வருகிறார். ஜெயலட்சுமி தயாரிக்கும் துணி பைகள் நந்தகுடி, சுலிபெலே, சூர்யாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.

சுஜாதா


சிக்கபல்லாபூரின் அஜ்ஜாவாரா கிராமத்தை சேர்ந்தவர். கரிம எண்ணெய் தயாரிக்கும் தொழில் செய்கிறார். இதற்காக தாவரங்கள் விதைகள், கொட்டைகளை பயன்படுத்துகிறார். கரிம எண்ணெய் பெரும்பாலும் அழகுசாதன பொருட்கள், விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த எண்ணெயை முகத்தில் தேய்த்தால் சருமம் ஈரப்பதமாகவும், முக சுருக்கங்களை குறைக்கவும் உதவும். இயற்கை முறையில் தயாரிப்பதால் சுஜாதா தயாரிக்கும் கரிம எண்ணெய்க்கு சிக்கபல்லாபூர் மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகம் உள்ளது. ஐந்து பெண்களுக்கு வேலை கொடுத்து தொழில் முனைவோராக மாறி உள்ளார்.

பாக்யம்மா


பெங்களூரு ரூரல் ஜிகனி அருகே அரகெரே கிராமத்தை சேர்ந்தவர். ரசாயனம் இல்லாத பற்பசை தயாரிக்கும் தொழில் செய்கிறார். இதற்காக தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, கற்றாழை, கிராம்பு எண்ணெய், மிளகு கீரை ஆகியவற்றை பயன்படுத்துகிறார். தான் தயாரிக்கும் பற்பசையை பெங்களூரு ரூரல் மாவட்டம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். ஐந்து பெண்களுக்கு வேலையும் அளித்து உள்ளார்.

சர்வாரி


பெங்களூரில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் உள்ள சிறிய கிராமமான எலச்சினஹள்ளியை சேர்ந்தவர். பயன்படுத்த முடியாது என்று கருதி துாக்கி வீசும் பொருட்களை சேகரித்து வண்ணமயமாக்கும் தொழில் செய்கிறார். பொருட்களை அழகாக வடிவமைப்பது இவருக்கு கை வந்த கலை. குப்பை கழிவுகளையும் தரம் பிரிக்கிறார்.

'குப்பை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரிந்து கொண்டேன். எங்கள் கிராமத்தில் கழிவுகளை தரம் பிரிக்க யாரும் தயாராக இல்லை. இதனால் குப்பைகளை தரம் பிரிப்பதையும் ஒரு வேலையாக செய்கிறேன்' என்று சர்வாரி கூறி உள்ளார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us