/பிற மாநில தமிழர்/புதுடில்லி/சுப சித்தி விநாயகர் கோவிலில் ருக்மிணி கல்யாணம்சுப சித்தி விநாயகர் கோவிலில் ருக்மிணி கல்யாணம்
சுப சித்தி விநாயகர் கோவிலில் ருக்மிணி கல்யாணம்
சுப சித்தி விநாயகர் கோவிலில் ருக்மிணி கல்யாணம்
சுப சித்தி விநாயகர் கோவிலில் ருக்மிணி கல்யாணம்

ருக்மிணி கல்யாணம் பற்றிய தகவல்கள்:-
ருக்மிணிக்கும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் நடந்த தெய்வீகக் கல்யாணம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் 10-வது ஸ்கந்தத்தில் 52-53-54 அத்தியாயங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
விதர்ப்ப நாட்டின் அரசன் பீஷ்மகா என்பவனுக்கு 5 ஆண் குழந்தைகள் (ருக்மி, ருக்மரதா, ருக்மாபஹு, ருக்மகேஸா, ருக்மமாலி). ஒரு அழகிய பெண் குழந்தை. ருக்மிணி (வைதர்ப்பி) எனப் பெயர் கொண்ட இவள் படிப்பு, சங்கீதம், பக்தி போன்றவற்றில் தேர்ந்து விளங்கினாள்.
அரண்மனைக்கு வரும் முனிவர்கள் கிருஷ்ணனைப்பற்றி மன்னனாகிய தன் தந்தையிடம் சொல்வதையெல்லாம் ருக்மிணி கேட்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டாள். ஸ்ரீ கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக் கொள்ள உறுதி கொண்டாள். தந்தை ஒத்துக் கொண்டாலும், அண்ணன் ருக்மி மறுத்து விட்டான்; தன் நண்பன் சிசுபாலனைத் தான் கல்யாணம் பண்ணிகொள்ள வேண்டுமென நிச்சயித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தான்.
துவாரகையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தன் நிலையை விளக்கி விரிவாக ஒரு கடிதம் எழுதி, அதை அரச சபைக்கு வந்த ஒரு பாகவதர் மூலம் துவாரகைக்கு அனுப்பினாள். மொத்தம் 7 ஸ்லோகங்களில் தன் நிலையை விளக்கினாள். (ஸ்ரீமத் பாகவதம், ஸ்கந்தம் 10 - அத்தியாயம் 52 - ஸ்லோகங்கள் 37 முதல் 43 வரை).
கல்யாணத்திற்கு முதல் நாள் தான் ஒரு குறிப்பிட்ட அம்பிகை கோயிலுக்கு போவது சம்ப்ரதாயம் என்றும், அங்கு வந்து தன்னை தூக்கிக் கொண்டுபோய் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லியும் கிருஷ்ணனுக்கு சொன்னாள்.
கடிதத்தைப் படித்த கிருஷ்ணன் உடனே விதர்ப்பா வந்து, ருக்மி, சிசுபாலன் போன்றோரை வெற்றி கொண்டு, ருக்மிணியை தேரில் ஏற்றி துவாரகைக்கு வந்து, அங்கு தன் பெற்றோர் முன்னிலையில் பிராட்டியை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.
தெய்வீக திருமணங்கள் வரிசையில் ருக்மிணி கல்யாணமும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு ஆன்மீக இன்பத்தில் திளைத்தனர். தில்லி மணி பாகவதர் குழுவினர் இந்த வைபவத்தை பஜனை பந்ததியில் நடத்தி வைத்தார்கள். மிருதங்கத்தில் சுவாமிநாதன், லட்சுமி சதீஷ் மற்றும் வயலினில் ஹரி கார்த்திக் உடன் வாசித்து சிறப்பித்தனர். கோவில் சார்பில் கலைஞர்கள் கெளரவிக்கப் பட்டனர். கோவில் நிர்வாகம் அனைவருக்கும் கல்யாண விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி