Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/மருத்துவ குணமும் தெய்வீகமும் நிறைந்தது நம் பாரம்பரிய இசை!

மருத்துவ குணமும் தெய்வீகமும் நிறைந்தது நம் பாரம்பரிய இசை!

மருத்துவ குணமும் தெய்வீகமும் நிறைந்தது நம் பாரம்பரிய இசை!

மருத்துவ குணமும் தெய்வீகமும் நிறைந்தது நம் பாரம்பரிய இசை!

அக் 08, 2024


Latest Tamil News
நம் பாரம்பரிய இசை மருத்துவ குணமும் தெய்வீகமும் நிறைந்தது என்று தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே வி கே பெருமாள் பேசினார்.

ஆஸ்திக சமாஜம், ரசிகப்ரியா அமைப்புகள் இணைந்து நடத்தும் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி கேசவபுரம் ஶ்ரீ ஐஸ்வர்யா மகாகணபதி ஆலயத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 5 ) அன்று நடைபெற்றது. டி.என்.எஸ். கிருஷ்ணன் வாய்ப்பாட்டு பாட, ராகவேந்திர பிரசாத் வயலினும், சங்கர் ராமன் மிருதங்கமும் வாசித்தனர். ஆஸ்திக சமாஜத்தின் தலைவர் சிவராமகிருஷ்ண சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தில்லிக் கம்பன் கழகத்தின் தலைவர் கே வி கே பெருமாள் சிறப்பு விருந்தினரகக் கலந்து கொண்டு, இசைக் கலைஞர்களுக்குப் பொன்னாடைகள் அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:


'இசைக்கு நோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் இருப்பதை அறிந்து கொள்ள, மேலை நாடுகளில் 'மியூசிக் தெரபி' என்ற பெயரில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இசையின் மருத்துவ குணத்தை அறிந்திருந்தார்கள். சரபோஜி மன்னருக்கு ஏற்பட்ட தீராத வயிற்று வலியை தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனைகள் பாடிக் குணப்படுத்தியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. அதேபோல் திருநாவுக்கரசர், முத்துத் தாண்டவர் ஆகியோர் பதிகங்கள் பாடி, பாம்புக் கடிக்கு ஆளானர்வர்களைக் குணப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.


எட்டயபுரத்தில் மழை இன்றி வறட்சி நிலவியபோது முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷினி ராகம் பாடி மழை பொழிய வைத்துள்ளார். ஒரு முறை மதம் பிடித்துவிட்ட அரண்மனை யானை ஒன்று அந்த இசை வல்லுநருக்குக் கட்டுப்பட்டதாக நம்பப்படுகிறது. இவ்வாறு, நமது பாரம்பரிய இசை மருத்துவ குணமும், தெய்வீகக் குணமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளதாக இருப்பதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். இவ்வளவு சிறப்புக்குரிய நமது இசையைத் தொய்வின்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று அவர் பேசினார்.


விழாவுக்கான ஏற்பாடுகளை ரசிகப்ரியா அமைப்பின் தலைவர் முனைவர் டி.வி. மணிகண்டன், செயலாளர் இராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us