Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ டிரம்ப் சந்திப்பை மோடி தவிர்த்தது ஏன்?

டிரம்ப் சந்திப்பை மோடி தவிர்த்தது ஏன்?

டிரம்ப் சந்திப்பை மோடி தவிர்த்தது ஏன்?

டிரம்ப் சந்திப்பை மோடி தவிர்த்தது ஏன்?

ADDED : ஜூன் 19, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்:தர்மசங்கடம் ஏற்படுவதையும், விமர்சனங்கள் எழுவதையும் தவிர்க்கவே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும்படி அழைப்பு விடுத்தும், நேரில் சந்திப்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, வட அமெரிக்க நாடான கனடாவில் நடந்த 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்றார். அங்கிருந்து, குரேஷியா செல்வதற்கு ஏற்கனவே பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனடாவுக்கு மோடி வருவதற்கு முன்னதாகவே, ஜி - 7 மாநாட்டில் இருந்து டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பினார். அதனால், கனடாவில் இருவரும் சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று தொலைபேசி வாயிலாக இருவரும் பேசினர். அப்போது, 'பக்கத்தில் தானே இருக்கிறீர்கள்; அமெரிக்காவுக்கு வாருங்கள் பேசலாம்' என டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

ஆனால், ஏற்கனவே குரோஷியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதால், தன்னால் வர முடியாது என, டிரம்பிடம் மோடி கூறியுள்ளார்.

இதற்கு சில காரணங்களும் உள்ளன. மிகவும் கவனத்துடனும், ஜாக்கிரதை உணர்வுடனும் அமெரிக்கா செல்வதை மோடி தவிர்த்ததாக கூறப்படுகிறது.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இதையடுத்து, இரு தரப்பும் சில நாட்கள் மோதிக்கொண்டன.

அப்போது, தன் முயற்சி யால் தான், மோதலை நிறுத்திக்கொள்ள இந்தியா, பாகிஸ்தான் முன் வந்ததாக டிரம்ப் கூறினார். ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. டிரம்புடன் நேற்று தொலைபேசியில் பேசியபோதும், மோடி இதை குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவருடன் மதிய விருந்தில் டிரம்ப் பங்கேற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு சென்றால், அது உலக அரங்கிலும், உள்நாட்டிலும் தேவையில்லாத தர்மசங்கடத்தையும், விமர்சனங்களையும் எழுப்பும் என்பதாலேயே, டிரம்பின் அழைப்பை மோடி நிராகரித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை அடங்கிய 'குவாட்' அமைப்பின் கூட்டம், இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. அதில் பங்கேற்க வரும்படி, டிரம்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us