ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களுக்கு வலை விரிக்கும் ஹாங்காங் பல்கலை
ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களுக்கு வலை விரிக்கும் ஹாங்காங் பல்கலை
ஹார்வர்ட் வெளிநாட்டு மாணவர்களுக்கு வலை விரிக்கும் ஹாங்காங் பல்கலை
ADDED : மே 25, 2025 02:25 AM

ஹாங்காங்: அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ள நிலையில், அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிபந்தனையற்ற சலுகைகளை வழங்குவதாக, ஹாங்காங்கில் உள்ள பல்கலை அறிவித்துள்ளது.
மோதல்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் பிரபலமான ஹார்வர்ட் பல்கலை செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர், பார்வையாளர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் சேர்கின்றனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே மோதல் நடக்கும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹார்வர்ட் பல்கலையில் சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம், போராட்டங்களுக்கு தடை விதிக்கும்படி கோரியது. ஆனால், இதை ஹார்வர்ட் பல்கலை ஏற்கவில்லை.
இதையடுத்து, அந்த பல்கலைக்கான நிதியுதவியை நிறுத்தியதோடு, வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கும் உடனடி தடை விதித்து, நேற்று முன்தினம் அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
இதனால், பல்கலையில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு, மாசசூசெட்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நிபந்தனை
இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலையில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, தங்கள் பல்கலையில் சேர நிபந்தனையற்ற சலுகைகளை வழங்குவதாக, சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த பல்கலை வெளியிட்ட அறிக்கையில், 'ஹார்வர்ட் பல்கலையில் அடுத்த கல்வியாண்டில் சேர முடியாத மாணவர்கள், எங்கள் பல்கலையில் எந்த நிபந்தனையுமின்றி சேரலாம்.
'விரைவான சேர்க்கை, கடன் பரிமாற்றங்கள், மாணவர்களுக்கு விசா, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவோம். வெளிநாட்டு மாணவர்களை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.