அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக்; சீனாவை வழிக்கு கொண்டு வந்தார் டிரம்ப்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக்; சீனாவை வழிக்கு கொண்டு வந்தார் டிரம்ப்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக்; சீனாவை வழிக்கு கொண்டு வந்தார் டிரம்ப்
ADDED : செப் 26, 2025 07:03 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனத்தின், 'டிக்டாக்' செயலியை, கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இசை, நடன வீடியோக்களை போடும் இந்த தளத்தின் பயனர்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த தகவல்களை சீன அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக, டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்பனை செய்யும்படி, 'பைட்டான்ஸ்' நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார். இல்லையெனில் டிசம்பரில் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க - சீன அதிபர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான ஆவணத்தில் அவரும் கையெழுத்திட்டு, அதனை வெளியிட்டார். அப்போது, அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள டிக்டாக்கின் கொள்கையும், விதிகளும் சரியாக உருவாக்கப்படும் எனக் கூறினார்.
அதேபோல, துணை அதிபர் ஜேடி.வான்ஸ் கூறுகையில், 'இந்த ஒப்பந்தம் பயனர்கள் பார்க்கும் உள்ளடக்கத்தை வடிவமைக்கும் வழிமுறைகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும். எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கமும் இதை ஒரு பிரசாரக் கருவியாகப் பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் இதை பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்,' என்றார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் நிறுவனத்தின் பங்குகளில் 80 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்களும், 20 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான பங்குகளை 'பைட்டான்ஸ்' நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.