ரயில் திட்டம்: பாகிஸ்தான் - ஆப்கன் ஆலோசனை
ரயில் திட்டம்: பாகிஸ்தான் - ஆப்கன் ஆலோசனை
ரயில் திட்டம்: பாகிஸ்தான் - ஆப்கன் ஆலோசனை
ADDED : ஜூன் 03, 2025 01:03 AM

இஸ்லாமாபாத்: மூன்று நாடுகளுக்கு இடையேயான ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய ஆசியாவில், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் சீனா இடையே, 760 கி.மீ., துார ரயில் பாதை அமைப்பது தொடர்பான திட்டம் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.
மொத்தம், 41,000 கோடி ரூபாயில், இந்த நாடுகளை இணைக்கும் வகையில், ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வந்தன.
ரூ.31,000 கோடி
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே, 573 கி.மீ., துாரத்துக்கான ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பேச்சு நடத்தி வருகின்றன. இது, 31,000 கோடி ரூபாயில் அமைய உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு மீது, எல்லை தாண்டி பயங்கரவாத தாக்குதலை நடத்துவதாக, பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இதனால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.
சீனாவின் தலையீட்டில், மூன்று நாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, இணைந்து செயல்படுவது என, முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை, துாதரக வாயிலாக மேற்கொள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முன்வந்தன. கடந்த மாதம், பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர், ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார்.
தொலைபேசி பேச்சு
இதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி உடன், இஷாக் தர், தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.
அப்போது, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்டில் இருந்து, ஆப்கானிஸ்தான் வழியாக, பாகிஸ்தானின் லாகூர் வரையிலான, ரயில் பாதை திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை விரைவில் உருவாக்கி, ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருவரும் ஒப்புக்கொண்டதாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.