Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ பிரதமர் மோடி மிக நல்ல நண்பர் அமெரிக்க அதிபர் திடீர் பாச மழை

பிரதமர் மோடி மிக நல்ல நண்பர் அமெரிக்க அதிபர் திடீர் பாச மழை

பிரதமர் மோடி மிக நல்ல நண்பர் அமெரிக்க அதிபர் திடீர் பாச மழை

பிரதமர் மோடி மிக நல்ல நண்பர் அமெரிக்க அதிபர் திடீர் பாச மழை

ADDED : செப் 11, 2025 02:27 AM


Google News
வாஷிங்டன்:“பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிக நல்ல நண்பர்; வரும் வாரங்களில் அவருடன் பேசுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கு இந்தியா மிக அதிக வரி விதிப்பதாகவும், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இறக்குமதி செய்வதில்லை என்றும் கூறி, நம் நாட்டுக்கு ஆகஸ்ட் 7ல், 25 சதவீத வரி விதித்தார்.

அதன் பின், 'ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் போர் தொடர காரணமாக இந்தியா உள்ளது' என, குற்றஞ்சாட்டி இரண்டாம் நிலை வரி என்ற பெயரில் ஆகஸ்ட் 22ல் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இந்த 50 சதவீத வரி தற்போது அமலில் உள்ளது.

இதனால் இந்தியா உடனடியாக அமெரிக்காவின் நிபந்தனைகளை எல்லாம் ஏற்று, வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் செய்வதற்கு ஓடி வரும் என, அதிபர் டிரம்ப் எண்ணினார். ஆனால், வர்த்தகம் தொடர்பாக சாதகமான பேச்சு எதுவும் நடக்கவில்லை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் இந்தியா நிறுத்தவில்லை. இதேபோல், சீனாவுக்கும் வரி விதிக்கப்பட்டது. அவர்களும் தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகின்றனர்.

சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சந்தித்து பேசினர். இது முத்தரப்பு உறவை வலுப்படுத்துவதாக அமைந்தது.

இதனால் இந்தியா உடனான 40 ஆண்டு கால நட்புறவை இழந்துவிடுவோம் என அதிபர் டிரம்பின் சொந்த கட்சியினரே எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று தன் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது:

இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சு நடத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் மிக நல்ல நண்பர், பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன். இரு சிறந்த நாடுகளும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

'நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்'

அதிபர் டிரம்பின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய மற்றும் இயல்பான நட்பு நாடுகள். எங்கள் வர்த்தகப் பேச்சுகள் இந்தியா- - அமெரிக்கா உறவின் எல்லையற்ற திறன்களை பயன்படுத்த வழிவகுக்கும். 'இந்த பேச்சுக்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்புடன் பேசுவதை நானும் எதிர்பார்க்கிறேன். நாட்டு மக்களுக்கு பிரகாசமான, செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்' என, மோடி குறிப்பிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us