குரானை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
குரானை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
குரானை அவமதித்த நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 22, 2024 06:10 AM

பெஷாவர்: பாகிஸ்தானில் முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்த சுற்றுலா பயணி கைதான நிலையில், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சுட்டுக் கொன்றதுடன், பொதுவெளியில் அவரை துாக்கிலிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சுற்றுலா
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் நகருக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றார். அங்கு அவர், முஸ்லிம்களின் புனித நுாலான குரானை அவமதித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, முகமது இஸ்மாயிலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, அங்குள்ள மசூதியில், ஒலிபெருக்கி வாயிலாக இச்சம்பவம் குறித்து நடந்த விபரம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, முகமது இஸ்மாயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு முழக்கமிட்டனர். போலீசார் எச்சரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்தவர்கள் போலீஸ் நிலையத்தை சூறையாடியதுடன், போலீஸ் வாகனங்களையும் தீக்கிரையாக்கினர். இதனால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என கருதி, போலீசார் ஓட்டம் பிடித்தனர்.
பதற்றம்
அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட முகமது இஸ்மாயிலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரது உடலை வெளியே இழுத்துச் சென்று பொதுவெளியில் துாக்கிலிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதை அடுத்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.