கனடாவை மாகாணமாக்குங்கள்; டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
கனடாவை மாகாணமாக்குங்கள்; டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
கனடாவை மாகாணமாக்குங்கள்; டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2025 04:48 AM

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை, வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தக இடைவெளியை டிரம்ப் சுட்டிக் காட்டினார். மேலும், வரிச் சலுகை அளிக்கும்படி, ட்ரூடோ கோரிக்கை விடுத்தார்.
அப்போது, 'எதற்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும். பேசாமல், கனடாவை, அமெரிக்காவின் ஒரு மாகாணமாக்கி விடுங்கள்' என, டிரம்ப் சிரித்தபடி கூறினார். ஆனால், இந்த வாதத்தை அவர் அதன்பின் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், தன் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். தற்போது தற்காலிக பிரதமராக உள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் கூறியதாவது:
நான் ஏற்கனவே கூறியபடி கனடாவை, அமெரிக்காவின், 51வது மாகாணமாக்கிவிட வேண்டும். அப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும். கனடாவின் பெரும்பாலான மக்கள், அமெரிக்காவுடன் இணைவதை விரும்புகின்றனர்.
இதற்கு மேலும், அமெரிக்கா வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்க முடியாது. கனடாவுக்கான மானியங்களை தொடர்ந்து வழங்க முடியாது. இது தெரிந்துதான், ட்ரூடோ தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும். ரஷ்யா மற்றும் சீன கப்பல்களால் ஏற்படும் அச்சுறுத்தலும் இருக்காது. அனைவரும் இணைந்து நாட்டை சிறப்பானதாக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.