Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியது தீ: 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் பலி

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியது தீ: 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் பலி

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியது தீ: 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் பலி

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியது தீ: 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் பலி

UPDATED : ஜூன் 12, 2024 10:28 PMADDED : ஜூன் 12, 2024 02:19 PM


Google News
Latest Tamil News
குவைத்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உள்பட 40 இந்தியர்களுடன் மொத்தம் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரதமர் உத்தரவை அடுத்து, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் விரைகிறார்.



அரபு நாடுகளில் ஒன்றான தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குவைத் நேரப்படி காலை 6 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் இருந்த மக்கள், தப்பிக்க முயற்சி செய்தனர். சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீ விபத்தால், 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உயரிழந்த 40 இந்தியர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

தீ விபத்தால் பலர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெய்சங்கர் இரங்கல்


வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: குவைத்தில் நிகழ்ந்த தீ விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வருகிறது. நமது தூதர் அங்குள்ள முகாமிற்கு சென்றுள்ளார்; மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எங்களது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உதவி எண் அறிவிப்பு


குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக +965-65505246 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



குவைத் செல்கிறார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்


பிரதமர் உத்தரவிட்டதை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் செல்கிறார்.

கார்கே இரங்கல்


குவைத் தீ விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அயலக நலத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு


குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் அவர்களின் விவரங்களை பெறவும், அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் குவைத் தீ விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலக தமிழர் நல துறையை தொடர்பு கொள்ள எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி அயலக துறையை தொடர்பு கொள்ள

இந்தியாவிற்குள் 91 1800 309 3793

வெளிநாட்டில் இருப்பவர்கள் அயலக துறையை தொடர்பு கொள்ள 91 80 6900 9900 மற்றும் 91 80 6900 9901 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரதமர் அவசர ஆலோசனை


சம்பவம் தொடர்பாக தலைநகர் புதுடில்லியில் பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர்


குவைத் தீ விபத்தில் பலியான இநதியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ/2லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் இ்நதியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us