பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்; இந்தியாவுக்கு ஜப்பான், யு.ஏ.இ., ஆதரவு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்; இந்தியாவுக்கு ஜப்பான், யு.ஏ.இ., ஆதரவு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்; இந்தியாவுக்கு ஜப்பான், யு.ஏ.இ., ஆதரவு

அபுதாபி: பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை களுக்கு, ஜப்பான், யு.ஏ.இ., நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில், நம் படைகள் சமீபத்தில் தாக்குதல்கள் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தன.
இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவது குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராக நம் நாட்டின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், ஏழு குழுக்களை மத்திய அரசு அறிவித்தது.
இரண்டு குழுக்கள்
எம்.பி.,க்கள் தலைமையிலான இந்தக் குழுவில், பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள், முன்னாள் துாதர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன்படி, இரண்டு குழுக்கள், தன் முதல் பயணமாக மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு சென்றுள்ளன.
சிவசேனா எம்.பி.,யான ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு, யு.ஏ.இ., சென்றுள்ளது. அந்த நாட்டின் அமைச்சரும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்தது.
ராணுவம், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பார்லிமென்ட் குழு தலைவர் அலி ஆல்னுவாமி, யு.ஏ.இ., தேசிய கவுன்சில் உறுப்பினர் அஹமது மிர் கூரி உள்ளிட்டோரையும் இந்த குழு சந்தித்தது.
இதுகுறித்து ஷிண்டே கூறுகையில், ''பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தோளோடு தோளாக நிற்கும் என, அந்த நாட்டின் தலைவர்கள் உறுதி அளித்துஉள்ளனர்.
''மத்தின் பெயரில் நடக்கும் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தை யும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிராகரிக்கும் என, அவர்கள் தெரிவித்தனர்.
''பன்முகத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பெயர் பெற்ற அந்த நாடு, சமீபத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து முதல் நாடு என்பதை மறந்துவிடக் கூடாது,'' என்றார்.
இதேபோல், ஐக்கிய ஜனதா தள எம்.பி.,யான சஞ்சய் ஜா தலைமையிலான குழு, ஜப்பானுக்கு சென்றது.
முழு ஆதரவு
பா.ஜ.,வின் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பருவா, ஹேமங்க் ஜோஷி, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், திரிணமுல் காங்.,கின் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகாஷி இவாயா, முன்னாள் பிரதமர் யோஷியிடே சுகா உள்ளிட்டோரை இந்த குழுவினர் சந்தித்தனர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஜப்பான் முழு ஆதரவு அளிக்கும் என, குழுவினரிடம் உறுதி அளித்தனர்.