ஏமனில் ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடித்துச் சென்ற ஹவுதி படையினர்
ஏமனில் ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடித்துச் சென்ற ஹவுதி படையினர்
ஏமனில் ஐநா ஊழியர்கள் 11 பேரை சிறைபிடித்துச் சென்ற ஹவுதி படையினர்
ADDED : செப் 01, 2025 11:46 AM

சனா: ஏமனில் ஐநா அலுவலகத்தில் சோதனை நடத்திய ஈரான் ஆதரவு ஹவுதி பயங்கரவாதிகள், அங்கு பணியில் இருந்த 11 ஊழியர்களை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஏமனில், அதன் அண்டை நாடான ஈரான் ஆதரவுடன், ஹவுதி படையினர் இயங்கி வருகின்றனர். இந்த படையினர், தலைநகர் சனா உட்பட பல பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து, தனியாக ஆட்சி நடத்தி வருகின்றனர். சனாவில் ஹவுதி படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுதி படையின் பிரதமர் அகமது அல்- ரஹாவி மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 5 அமைச்சர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.
இந்த நிலையில், சனாவில் இயங்கி வரும் ஐநா உணவு, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நிறுவனங்களின் அலுவலகங்களில் ஹவுதி படையினர் நேற்று (ஆக.,31) சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பணியாற்றி வந்த 11 ஐநா ஊழியர்களை சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சர்வதேச உணவு திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடெபா கூறுகையில், ' நேற்று காலை ஐநா நிறுவனங்களின் அலுவலகங்களில் ஹவுதி பாதுகாப்புப் படைகள் சோதனை நடத்தியது. அப்போது, ஊழியர்கள் 11 பேரை சிறைபிடித்து சென்று விட்டனர்,' என்றார்.