ஹிஸ்புல்லா தலைவர் பலி எதிரொலி: இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
ஹிஸ்புல்லா தலைவர் பலி எதிரொலி: இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
ஹிஸ்புல்லா தலைவர் பலி எதிரொலி: இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
ADDED : ஜூலை 05, 2024 03:58 AM

பெய்ரூட் : தங்கள் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி நேற்று தாக்குதல் நடத்தியது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்த ஆண்டு அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் துவங்கியதில் இருந்து இஸ்ரேல் ராணுவ நிலைகளைக் குறி வைத்து, லெபனான் நாட்டை மையமாக வைத்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக லெபனானில் உள்ள டயர் நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் முக்கிய தலைவர் முகமது நாமே நாஸா உயிரிழந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தினர். ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களும் ஏவப்பட்டன.
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேல் வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதால், லெபனான் - இஸ்ரேல் எல்லை பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.