Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா

'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா

'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா

'எங்களிடம் அசுர பலம் இருக்கு' அணிவகுத்து காட்டியது சீனா

UPDATED : செப் 04, 2025 06:41 AMADDED : செப் 04, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
பீஜிங்: இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததன் 80 ஆண்டு நிறைவை ஒட்டி, சீன அரசு 12,000 ராணுவ வீரர்கள், அணு ஆயுத ஏவுகணைகள், டாங்கிகள், விமானங்கள் என முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமாண்டமான ராணுவ பேரணியை நேற்று நடத்தி, உலக வல்லரசுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இரண்டாம் உலகப் போர், 1939 செப்.,1ல் துவங்கி, 1945 செப்., 2ல் ஜப்பான் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, செப்., 3ம் தேதியை வெற்றி தினம் என்ற பெயரில் சீனாஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

Image 1464705

25 நாடுகள்

இந்நிலையில், 8-0வது வெற்றி தினத்தையொட்டி, நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்புன் நேற்று நடந்தது. இதுபோன்ற பிரமாண்ட பேரணி, 10 ஆண்டுக்கு முன் நடத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் சீனாவில், இரண்டாவது சீனா - ஜப்பானிய போர் என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் கண்ணோட்டத்தில், இந்தப் போரில் அவர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக வெற்றி பெற்றதாக கருதுகின்றனர். நேற்றைய ராணுவ அணிவகுப்பு அந்த வெற்றியை நினைவு கூர்வதற்காகவும், சீனாவின் தற்போதைய ராணுவ வலிமையை வெளிப்படுத்துவதற்காகவும் நடத்தப்பட்டது.

Image 1464706இந்த அணிவகுப்புக்கு சீனாவின் அதிபர் ஷீ ஜின்பிங் தலைமை தாங்கினார். இவரே மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜின்பிங் உடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உட்பட 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பீஜிங்கில் உள்ள தியானமென் சதுக்கத்தில் இருந்து ராணுவ அணிவகுப்பு துவங்கியது. இதை, அதிபர் ஷீ ஜின்பிங், 'ஹாங்சி எல் - 5 லிமூசின்' எனப்படும் சீன அரசு நிகழ்ச்சிகளில் பாரம்பரியமாக பயன்படுத்தும் திறந்த நிலை காரில் சென்று பார்வையிட்டார்.

Image 1464707

அனுமதியில்லை

சீனாவின் அதிநவீன ஆயுதங்கள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. ஹைப்பர்சோனிக் எனப்படும் ஒலியின் வேகத்தில் செல்லக்கூடிய புதிய தலைமுறை ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், நீர்மூழ்கி ட்ரோன்கள், போர் விமானங்கள், விமானங்கள் செயல்பாட்டை தடுக்கும் கருவிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றன. அத்துடன் 12,000 ராணுவ வீரர்களும் அணிவகுத்து சென்றனர்.

விமானப் படை சார்பில் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. போர் ஹெலிகாப்டர்கள் 'நீதி வெல்லும்; அமைதி வெல்லும்; மக்கள் வெல்வர்' என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை பறக்கவிட்டப்படி சென்றன. மூன்று கி.மீ., தொலைவுக்கு 70 நிமிடங்கள் நடந்த இந்த அணிவகுப்புக்காக பீஜிங்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 50,000 பேர் பங்கேற்றனர். அதே நேரத்தில், பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

ராணுவ அணிவகுப்புக்கு பின் உலக நாடுகளின் தலைவர்களுடன் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது:


உலகம் ஒருபோதும் காட்டாட்சி சட்டத்திற்கு திரும்பக் கூடாது. அது பலவீனமானவர்களை வலிமையானவர்கள் சுரண்டும் இடம். சீன மக்களின் எழுச்சியை யாராலும் தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. நாங்கள் ஒருபோதும் பயப்படமாட்டோம். உலகை வழி நடத்தும் நாடுகளில் சீனாவும் ஒன்று.

இன்று, மனிதகுலம் அமைதி அல்லது போர்; உரையாடல் அல்லது மோதல்; வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற தேர்வை எதிர்கொண்டுள்ளது. மனித நாகரிகத்தின் அமைதியான வளர்ச்சியின் உன்னத இலக்கு வெற்றி பெற வேண்டும். ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் ஒன்றுபட அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சதிக்கு நன்றி!


இரண்டாம் உலகப் போரில் சீனாவை விடுவிக்க அமெரிக்கா அளித்த பெரும் ஆதரவையும், தியாகத்தையும் அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங் குறிப்பிடுவாரா. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்கிறீர்கள். அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். - டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர்



அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம்


சீனாவின் ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வடகொரியா, பாகிஸ்தான், மியான்மர், இந்தோனேஷியா, மலேஷியா, வியட்நாம், மாலத்தீவுகள், நேபாளம் என 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பெரும்பாலானவை அண்டை நாடுகள். மேற்கத்திய நாடுகளில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்லோவாக்கியா மட்டுமே பங்கேற்றது.



150 ஆண்டு வாழ முடியும்


ராணுவ அணி வகுப்புக்குப் பின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் நடந்து சென்றனர். அப்போது அவர்கள் பேசியது, நேரடி ஒளிபரப்பில் வெளியாகியுள்ளது.
'உயிரி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதன்படி, மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றிக் கொள்ள முடியும். மரணத்தைக் கூட வெல்ல முடியும்' என, புடின் கூறியுள்ளார். '150 ஆண்டுகள் கூட வாழலாம் என்கின்றனர்' என, ஜின்பிங் அதற்கு பதிலளித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us