Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/' போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்': பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்

' போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்': பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்

' போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்': பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்

' போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் நாங்கள் தான் கோரினோம்': பாக்., துணைப்பிரதமர் ஒப்புதல்

UPDATED : ஜூன் 20, 2025 05:32 PMADDED : ஜூன் 20, 2025 04:25 PM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்: '' பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,'' என பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஹிந்து சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

அதையடுத்து, இந்திய எல்லைக்குள் ராணுவம் மற்றும் சிவிலியன் இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பதிலுக்கு, பாகிஸ்தானில் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் ஷோர்காட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து, போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால், நான்கு நாட்களாக நீடித்த சண்டை, மே 10ல் நிறுத்தப்பட்டது.

போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார்.“போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் உங்கள் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் எச்சரித்தேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள்” என்று ட்ரம்ப் மார்தட்டினார்.

ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு ''ட்ரம்ப் சொன்னது உண்மை அல்ல; பாகிஸ்தான் ராணுவ தளபதி தான் நமது தளபதியுடன் போனில் பேசி, போர் நிறுத்தம் செய்ய முன்வந்தார். பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று, போரை நிறுத்த இந்தியா சம்மதித்தது” என்று விளக்கம் அளித்தது.


இந்நிலையில், போர் நிறுத்தத்தை தாங்கள் தான் கோரினோம் என்பதை பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டு உள்ளார்.



இது தொடர்பாக அவர் கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக, இந்தியா மீண்டும் அதிகாலை 2:30 மணிக்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் நூர் கான் விமானப்படை தளத்தையும், ஷோர்கோட் விமானப்படை தளத்தையும் தாக்கினர். அடுத்த 45 நிமிடத்தில் சவுதி இளவரசர் பைசல் என்னை அழைத்தார். அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரூபியோவுடன் நான் பேசியது குறித்து அறிந்ததாக தெரிவித்தார்.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசவும், இந்தியா தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தானும் நிறுத்த தயாராக இருக்கிறது என்று தெரிவிக்க தனக்கு அதிகாரம் உள்ளதா என்று அவர் கேட்டார். அதற்கு நான், '' ஆம் சகோதரரே, உங்களால் முடியும்'' என்றேன். பின்னர் அவர் என்னைத் திரும்ப அழைத்து, ஜெய்சங்கரிடம் அதையே தெரிவித்ததாக கூறினார்,'' இவ்வாறு அவர் கூறினார்.

நூர்கான் விமானப்படை தளம் என்பது பாகிஸ்தானின் முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றாகும். ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையே இது அமைந்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் மற்றும் விஐபி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஷோர்கோட் விமானப்படை தளம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us