உறவுக்கார பெண்ணுக்கு 'டார்ச்சர்': இந்திய தம்பதியருக்கு சிறை
உறவுக்கார பெண்ணுக்கு 'டார்ச்சர்': இந்திய தம்பதியருக்கு சிறை
உறவுக்கார பெண்ணுக்கு 'டார்ச்சர்': இந்திய தம்பதியருக்கு சிறை
ADDED : ஜூன் 27, 2024 06:35 AM

வாஷிங்டன் : படிக்க வைப்பதாகக் கூறி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று உறவினர் பெண்ணை தங்கள் கடைகளில் பணியாற்ற வைத்ததுடன், உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்திய இந்திய- தம்பதிக்கு சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஹர்மன்பிரீத் சிங், 31, மற்றும் குல்பீர் கவுர், 43, என்ற இந்திய தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் அங்கு பெட்ரோல் பங்க் மற்றும் பல்பொருள் அங்காடி நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு, தங்கள் உறவினர் பெண்ணை படிக்க வைப்பதாக கூறி, அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, அப்பெண்ணின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்த இத்தம்பதி, தங்களின் பெட்ரோல் பங்க், பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் காசாளராகவும், கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது என நாளொன்றுக்கு 12 முதல் 17 மணி நேரம் வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினர். இது தவிர, அப்பெண்ணிற்கு, உடல் மற்றும் மன ரீதியாகவும் தொல்லை அளித்தனர்.
தன் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அளிக்கும்படி கேட்ட அந்த பெண்ணை, தம்பதியர் அடித்து உதைத்ததுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு வரை இதே நிலை நீடித்துள்ளது. இதற்கிடையே, அப்பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஹர்மன்பிரீத் சிங் மற்றும் குல்பீர் கவுருக்கு எதிரான குற்றச்சாடுகள் அனைத்தும் உரிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு முறையே 11 ஆண்டு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு தொகையாக 1.87 கோடி ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.