Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ இது போருக்கான காலமல்ல ஆஸ்திரியாவில் மோடி வலியுறுத்தல்

இது போருக்கான காலமல்ல ஆஸ்திரியாவில் மோடி வலியுறுத்தல்

இது போருக்கான காலமல்ல ஆஸ்திரியாவில் மோடி வலியுறுத்தல்

இது போருக்கான காலமல்ல ஆஸ்திரியாவில் மோடி வலியுறுத்தல்

ADDED : ஜூலை 11, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
வியன்னா, போர்க்களத்தில் அமைதியை எதிர்பார்க்க முடியாது என ரஷ்யாவில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆஸ்திரியாவில் இதை மீண்டும் வலியுறுத்தினார். இது, போருக்கான காலம் அல்ல என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இதற்கிடையே, மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.

கூட்டறிக்கை

இந்த இரண்டு விவகாரங்களிலும் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. பேச்சின் வாயிலாகவே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தி வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி.

ரஷ்யாவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். போர்க்களத்தில் அமைதியை எதிர்பார்க்க முடியாது; பேச்சின் வாயிலாகவே அமைதியை ஏற்படுத்த முடியும் என, புடினிடம் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார் பிரதமர் மோடி. அந்த நாட்டுக்கு, 41 ஆண்டுகளுக்குப் பின், இந்திய பிரதமர் ஒருவர் பயணம் செய்துள்ளார். இதையடுத்து, மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவே, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெஹம்மர் அவரை சந்தித்து பேசினார். கார்ல் நெஹம்மரை கட்டியணைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்தப் படங்களை, இரண்டு பிரதமர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

உக்ரைன் போர் தொடர்பாக இருவரும் விரிவாக பேசினோம். இது, போருக்கான காலமல்ல. போர்க்களத்தில் எந்தத் தீர்வையும் காண முடியாது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது எங்கிருந்தாலும் ஏற்க முடியாது.

எந்தப் பிரச்னைக்கும் பேச்சின் வாயிலாகவே தீர்வு காண முடியும். உக்ரைன் விவகாரத்தில் அங்கு அமைதி ஏற்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் இருவரும் தயாராக உள்ளோம்.

இந்தியா - ஆஸ்திரியா இடையேயான துாதரக உறவின், 75வது ஆண்டில் உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினோம். பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது என்பதில் ஒரே கருத்தை கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே நிலைப்பாடு

ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெஹம்மர் கூறியுள்ளதாவது:

ரஷ்யா - உக்ரைன் போர், மேற்காசியாவில் உள்ள பதற்றமான சூழ்நிலை உட்பட பல விவகாரங்கள் தொடர்பாக பேசினோம்.

உலகளாவிய பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது முதல், இரு தரப்பு உறவுகள் வரை பல விஷயங்களை பேசினோம். இருவருக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் ஒரே நிலைப்பாடு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இசை வரவேற்பு

நேற்று முன்தினம் வியன்னா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, வந்தே மாதரம் பாடல் இசை வடிவில் ஒலிக்கப்பட்டது. இந்தக் குழுவை, இந்தியரான விஜய் உபாத்யாயா வழிநடத்தி வருகிறார். உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பிறந்த உபாத்யாயா, 57, வியன்னா இசை பல்கலையின் இயக்குனராக 1994ல் சேர்ந்தார். ஐரோப்பிய யூனியன் கலாசார திட்டங்களுக்கு ஆஸ்திரியா பிரதிநிதியாக உள்ளார். இதைத் தவிர, இந்திய தேசிய இளைஞர் இசைக்குழுவின் இயக்குனராகவும் உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us