சுனிதா விண்வெளி பயணம்: 3வது முறையாக சாதனை
சுனிதா விண்வெளி பயணம்: 3வது முறையாக சாதனை
சுனிதா விண்வெளி பயணம்: 3வது முறையாக சாதனை
ADDED : ஜூன் 05, 2024 11:36 PM

ஹூஸ்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' விண்வெளித் துறையிலும் இறங்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அது ஈடுபட்டது. பலமுறை திட்டமிட்டும், தொழில்நுட்பக் காரணங்களால், இந்தப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், போயிங் நிறுவனத்தின், 'ஸ்டார்லைனர்' என்று பெயரிடப்பட்டுள்ள ராக்கெட் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், 58 மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், 61, பயணித்தனர்.
போயிங் நிறுவனத்தின் ராக்கெட் ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இது. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இவர்கள் சென்று திரும்ப உள்ளனர்.
ஏற்கனவே, 2006 மற்றும் 2012ல் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அப்போது, விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்தார்.
அமெரிக்க கடற்படை அகாடமியில், 1987ல் பயிற்சி முடித்த அவர், கடற்படையில் இணைந்தார். 1998ல் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவால், விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்துக்குப் பின், சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் நாசா திட்டத்தில், இரண்டாவது தனியார் நிறுவனமாக, போயிங் தற்போது இணைந்துள்ளது.