செப்., 21ல் இலங்கை அதிபர் தேர்தல்
செப்., 21ல் இலங்கை அதிபர் தேர்தல்
செப்., 21ல் இலங்கை அதிபர் தேர்தல்
ADDED : ஜூலை 27, 2024 06:21 AM

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022ல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்தது.
இதை எதிர்கொள்ள முடியாமல், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக் சே நாட்டைவிட்டு தப்பிச் சென்று சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார்.
அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
அனைத்து கட்சிஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் வரும் நவம்பருடன்முடிவுக்கு வருகிறது.இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என இலங்கை தேர்தல் கமிஷனுக்கு, அந்நாட்டின் அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதுகுறித்து இலங்கை தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், 'அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி துவங்கும்' என, குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பின் நடைபெற உள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதேபோல், நீதித்துறை அமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக் சே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., தலைவர் அனுரா குமரா திசநாயகே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்துள்ளனர்.