ADDED : ஜூன் 22, 2024 01:23 AM

துஷான்பே, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தஜிகிஸ்தான் நாட்டில், பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில், 96 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் எனப்படும், முகம் மற்றும் தலையை மூடும் துணி அணிவதை, கடந்த 2015 முதலே அந்நாட்டு அதிபரான எமோமாலி ரஹ்மான் எதிர்த்து வந்தார்.
இந்த வழக்கம், நாட்டின் கலாசார பாரம்பரியத்திற்கு அச்சுறுத்தலாகவும், வெளிநாட்டு செல்வாக்கின் அடையாளமாகவும் உள்ளதாக தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
முன்னதாக, தஜிகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவியர், ஹிஜாப் மற்றும் மேற்கத்திய பாணியிலான குட்டை பாவாடை அணிய அந்நாட்டு கல்வித்துறை அப்போது தடை விதித்தது.
ஹிஜாப் அணிய நாடு முழுதும் தடை விதிக்க அப்போது இருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முஸ்லிம் மத பெரியவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து இந்த முயற்சியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், தஜிகிஸ்தான் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு, அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் எமோமாலி ரஹ்மானும் ஒப்புதல் அளித்து உள்ளார்.
மேலும், பக்ரீத் பண்டிகையின் போது முஸ்லிம் குழந்தைகள் வீடுவீடாக சென்று வாழ்த்து கூறி பணம் கேட்கும், 'இடி' என்ற நடைமுறைக்கும் அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார்.
இந்த தடை உத்தரவுகளை மீறும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மதத்தலைவர்களுக்கு 60,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
''ஹிஜாப் என்பது அன்னிய ஆடை. மதசார்பற்ற தேசிய அடையாளத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,'' என, அதிபர் எமோமாலி தெரிவித்தார்.