Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ புறப்பட்ட வேகத்தில் விழுந்து நொறுங்கியது விமானம் நேபாளத்தில் 18 பேர் பலி; உயிர் தப்பினார் பைலட்

புறப்பட்ட வேகத்தில் விழுந்து நொறுங்கியது விமானம் நேபாளத்தில் 18 பேர் பலி; உயிர் தப்பினார் பைலட்

புறப்பட்ட வேகத்தில் விழுந்து நொறுங்கியது விமானம் நேபாளத்தில் 18 பேர் பலி; உயிர் தப்பினார் பைலட்

புறப்பட்ட வேகத்தில் விழுந்து நொறுங்கியது விமானம் நேபாளத்தில் 18 பேர் பலி; உயிர் தப்பினார் பைலட்

ADDED : ஜூலை 25, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
காத்மாண்டு,நேபாளத்தில், புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறியதில், அதிலிருந்த 18 பேர் உடல் கருகி பலியாகினர்; ஒரு விமானி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து போகரா என்ற இடத்தில் உள்ள பராமரிப்பு மையத்துக்கு, சவுர்யா ஏர்லைன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 என் - ஏ.எம்.இ., என்ற சிறிய ரக விமானம் நேற்று காலை 11:10 மணிக்கு புறப்பட்டது.

பராமரிப்பு பணிகளுக்காக புறப்பட்ட இந்த விமானத்தில் இரண்டு விமானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 19 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த நிலப்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்பு குழு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின் விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும், இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பயணித்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இடிபாடுகளில் சிக்கி படுகாயங்களுடன் போராடிய விமானி மணீஷ் ஷக்யா உட்பட நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில், சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த விமானி மணீஷ் ஷக்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான விமானி ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்.

இதற்கிடையே, இந்த விமானத்தின் தொழில்நுட்ப நிபுணரான மனு ராஜ் சர்மாவுடன், அவரின் மனைவி ப்ரீசா காதிவாடா, 4 வயது மகன் ஆதி ஆகியோரும் இந்த விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.

இந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ப்ரீசா, நேபாள அரசின் எரிசக்தி, நீர் வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தில் துணை கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஆறுதல் கூறினார்.

நேபாளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விமான விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த 2010 முதல் இதுவரை மிகவும் பயங்கரமான 12 விபத்துகள் அங்கு நடந்துள்ளன.

கடந்த ஆண்டு, ஜனவரியில் போகரா அருகே எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பயணியர் உட்பட 72 பேர் உயிரிழந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us