வெப் பிரவுசர் போட்டியில் ஜோஹோவின் 'உலா' வெற்றி
வெப் பிரவுசர் போட்டியில் ஜோஹோவின் 'உலா' வெற்றி
வெப் பிரவுசர் போட்டியில் ஜோஹோவின் 'உலா' வெற்றி
ADDED : மார் 23, 2025 01:33 AM
சென்னை: இந்திய வெப் பிரவுசர் மேம்பாட்டு போட்டியில், 'ஜோஹோ' நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில், 'உலா' என்ற பெயரிலான ஜோஹோவின் வெப் பிரவுசர் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம், 434 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மூன்று கட்ட மதிப்பீட்டுக்கு பின், உலா வெப் பிரவுசர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள், சைபர் தாக்குதல்களை கண்டறியும் திறன், கண்டறிந்ததும் 24 மணி நேரத்துக்குள் அதை சரிசெய்யும் திறன் உள்ளிட்ட அம்சங்கள் இதற்கு வழிவகுத்தன. உலா என்பது தமிழில் சுற்றுலா அல்லது பயணம் என்ற பொருளை குறிக்கிறது. ஜோஹோ நிறுவனம், 2023ல் இந்த வெப் பிரவுசரை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து ஜோஹோ தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், “இதுபோன்ற போட்டிகள், தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு வழங்குவதை தாண்டி, தொழில்நுட்ப திறனில் நம் நாடு தன்னிறைவு அடைவதற்கான அடித்தளத்தையும் அமைக்கின்றன.
''இப்போட்டியில் அங்கீகரிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலா, பயனர்களின் தனியுரிமையை அவர்களது அடிப்படை உரிமையாக கருதுகிறது; இது, வணிக நோக்கங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படாது,” என்றார்.