பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு கர்நாடகா, தெலுங்கானா வலியுறுத்தல்
பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு கர்நாடகா, தெலுங்கானா வலியுறுத்தல்
பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு கர்நாடகா, தெலுங்கானா வலியுறுத்தல்
ADDED : மார் 23, 2025 01:33 AM
சென்னை: 'பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்' என, கர்நாடகா, தெலுங்கானா கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: லோக்சபா தொகுதி மறுசீரமைப்பில், நாடு இன்று பெரும் சவாலை எதிர்கொள்கிறது. மத்திய அரசின் கொள்கைப்படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த நிர்வாகம், சமூக மேம்பாடு என, தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு தண்டனை கொடுப்பது போலாகி விடும்.
எனவே, அதை ஏற்க முடியாது. எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைந்தால், தெற்கின் குரல் இரண்டாம்பட்சமாக மாறி விடும். எனவே, இப்போதிருக்கும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், மாநிலங்களுக்குள் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைக்க வேண்டும்.
லோக்சபாவில் தற்போது ஐந்து தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதமாக உள்ளது.
லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தே ஆக வேண்டும் என மத்திய அரசு நினைத்தால், இதை 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு முடிவை தள்ளிவைக்க வேண்டும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: கூட்டாட்சி என்பது மத்திய அரசு தரும் பரிசு அல்ல. அது, மாநிலங்களின் உரிமை. மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பது, கூட்டாட்சிக்கு எதிரானது. இது, அதிகாரத்தை ஒரு இடத்தில் குவிக்கவே உதவும்.
பன்முகத்தன்மை தான் இந்தியாவின் அடித்தளம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைத்தால், வட மாநிலங்களில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை செய்ய பா.ஜ., அரசு துடிக்கிறது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களை மத்திய அரசு பாராட்டுகிறது. ஆனால், அதையே காரணம் காட்டி, லோக்சபா தொகுதிகளை குறைக்க நினைக்கிறது; இதை ஏற்க முடியாது.
தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி. மாநிலங்களுடன் ஆலோசித்த பின்னரே, அது குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்: மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுசீரமைத்தால், பஞ்சாபில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறையும். தற்போது லோக்சபாவில் பஞ்சாபின் பிரதிநிதித்துவம் 2.39 சதவீதம்.
லோக்சபா தொகுதிகள் 850 ஆக அதிகரிக்கப்பட்டால், இப்போதிருக்கும் பிரதிநிதித்துவப்படி, பஞ்சாபுக்கு 21 தொகுதிகள் வேண்டும்.
ஆனால், பஞ்சாபில் பா.ஜ., ஒரு போதும் ஆட்சிக்கு வராது என்பதால், அதை செய்ய மாட்டார்கள். வட மாநிலங்கள் குறிப்பாக, ஹிந்தி பேசும் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மத்தியில் ஆட்சியை தக்க வைக்கவே பா.ஜ., முயற்சி செய்யும்.
கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார்: இந்த போராட்டம், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல; மாநிலங்களின் அடையாளம், கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்.
தென் மாநிலங்களுக்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல; கலாசார வளர்ச்சியிலும் தென் மாநிலங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
கர்நாடகாவின் மக்கள் தொகை, இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம். ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில், கர்நாடகாவின் பங்கு 8.4 சதவீதம். தென் மாநிலங்கள் 35 சதவீத பங்களிக்கின்றன.
எனவே, பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மாறாக, மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைப்பு செய்வது, தென் மாநிலங்கள் மீதான அரசியல் தாக்குதலாக அமையும்.
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கும் தென் மாநிலங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டுமே தவிர, தண்டிக்கக் கூடாது.
இது, வடக்கு, தெற்கு இடையிலான போர் அல்ல; மாநிலங்களின் உரிமைக்கான போராட்டம். இந்த வரலாற்று போராட்டத்தில், தென் மாநிலங்களுடன் பஞ்சாப், ஒடிசாவும் இணைந்துள்ளன.
எங்கள் குரல்கள் நீர்த்துப் போகவோ, எங்கள் வளங்கள் கொள்ளை அடிக்கப்படவோ, எங்கள் கலாசாரங்கள் அழிக்கப்படவோ, நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
சென்னையில் நடந்த கூட்டம் ஒரு நல்ல துவக்கம். ஒற்றுமையாக செயல்பட்டு, இந்த முயற்சியில் வெற்றி பெறுவோம்.
பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவர் ராம ராவ்: உரிமைகளை காக்கும் போராட்டங்களுக்கு, எப்போதும் உத்வேகம் அளிக்கும் மாநிலம் தமிழகம். மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்பது, மக்கள் தொகையை குறைத்த தென் மாநிலங்களை பாதிக்கும்.
இந்திய மக்கள் தொகையில், தெலுங்கானாவின் மக்கள் தொகை 2.8 சதவீதம். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் 5.1 சதவீதம் பங்களிக்கிறது. பொருளாதாரத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பு 35 சதவீதமாக உள்ளது. எனவே, பொருளாதார பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைப்பதே சரியாக இருக்கும்.
சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளை கடந்து விட்டோம். எனவே, மத்திய அரசு புதிதாக காயங்களை உருவாக்கக் கூடாது. சிறிய மாநிலமாக இருந்தாலும், பெரிய மாநிலமாக இருந்தாலும், யாரும் புறக்கணிப்படாத அளவுக்கு தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.